அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசங்களில் இரவு வேளைகளில் ஆயுதங்களுடன் வருவோர் பெண்களுடன் தகாதமுறையில் நடந்துகொண்ட சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லையென எழுத்துமூலம் தருமாறு அக்கரைப்பற்று பொலிஸார் இப்பகுதி கிராமசேவையாளர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர்களை வற்புறுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஆயுதம் தாங்கியவர்களின் இந்த நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதனிடம் முறையிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து இச்சம்பங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணரப்பட்டதன் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதனினால் வெளிநாட்டு தூதரகங்களுக்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்களும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தனர்.
எனினும் அக்கரைப்பற்று பொலிஸார் இப்பகுதியில் இவ்வாறான சம்பங்கள் எதுவும் இடம்பெறவில்லையென எழுத்துமூலமாக எழுதித்தருமாறு அச்சுறுத்தப்பட்டுவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதனிடம் முறையிடப்பட்டுள்ளது.