மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் படையினரை இலக்குவைத்து பொருத்தப்பட்டிருந்த கிளேமோர் குண்டு ஒன்றினை விசேட அதிரடிப்படையினர் மீட்டு செயலிழக்க செய்ததாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு சந்தியிலேயே இந்த கிளேமோர் பொருத்தப்பட்டிருந்ததாகவும் பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கிளேமோர் மீட்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 3 கிலோ எடையுடைய இக்குண்டானது இப்பகுதியில் பணிகளில் ஈடுபடும் விசேட அதிரடிப்படையினரை இலக்குவைத்தே பொருத்தப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கிளேமோர் குண்டு மீட்க்கப்பட்டதுக்கு சுமார் 200 மீற்றர் தூரத்திலேயே விசேட அதிரடிப்படையினரின் படுவாங்கரை பகுதிக்கான நுழைவாயில் சோதனைச்சாவடி அமைந்துள்ளது.
இதன் ஊடாக படுவாங்கரையில் உள்ள படையினருக்கான வினியோக பணிகள் இடம்பெற்றுவருகின்றன.
இவர்களை இலக்குவைத்தே இக்குண்டு பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.