தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாததாலேயே கிழக்கு உள்ளூராட்சித் தேர்தல் அமைதியாக இடம்பெற்றதாக யாழ். மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் என்று ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு நேற்று திங்கட்கிழமை அளித்த பேட்டியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற துணை இராணுவ அமைப்பானது இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்படுவது யாவருக்கும் தெரியும். இது அறிந்த உண்மை. அவர்களிடம் ஆயுதம் இல்லையெனவும் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதில்லையெனவும் கூறுவதில் அர்த்தம் இல்லை.
இந்த ஆயுதக் குழுவானது அந்தப் பகுதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் வாக்களிக்கக்கூட இடமளிக்கவில்லை. மட்டக்களப்பில் அவர்களின் உறவினர்கள் கடத்தப்பட்டனர். வரவு- செலவுத் திட்டத்தின் போது எமது 3 எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்கு வாக்களிக்க வரமுடியவில்லை. அவர்கள் வருகை தந்தால் உறவினர்கள் கொல்லப்படுவார்களென மிரட்டப்பட்டது. இது தொடர்பாக நாம் சர்வதேச சமூகத்துக்கு அறிவித்தோம்.
ஜனாதிபதியிடம் சர்வதேச சமூகம் இது தொடர்பாக கேட்டபோது அந்த மாதிரி எதுவும் இல்லையென தெரிவித்திருந்தார். இன்றுவரை எமது கிழக்கு மாகாண எம்.பி.க்கள் தமது தொகுதிகளுக்கு செல்ல முடியவில்லை. தொலைபேசி மூலம் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. எமது எம்.பி.க்களில் ஒருவரான சந்திரநேரு (சந்திரகாந்தன்) அம்பாறைக்கு சென்றபோது கருணா குழு அவரை கொண்டுசெல்ல முயன்றது. அவர் விசேட அதிரடிப்படையினரிடம் முறையிட்டபோது விசேட அதிரடிப் படை முகாமுக்கு சென்ற கருணா குழுவினர் நேருவை கொண்டு செல்ல விரும்புவதாக கூறியுள்ளனர். பாராளுமன்றத்தில் இந்த விடயங்கள் தொடர்பாக நாம் பிரஸ்தாபித்தபோதும் எதுவும் நடக்கவில்லை. இதுவே கிழக்கு மாகாண நிலைவரமாகும். விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமை இதுவாகும். சகல கடத்தல்கள், கொலைகளின் பின்னணியில் த.ம.வி.புலிகள் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் உள்ளூராட்சி சபைகளுக்கு நாம் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும். அவர்களுடைய பாதுகாப்புக்கு அரசாங்கம் வருமா என்பதும் சந்தேகமானதாகும். ஒரு வேட்பாளருக்கு 2 பொலிஸாரை காவலுக்கு நியமிப்பதும் பயனற்றதொன்றாகும். ஆதலாலேயே தமிழ் கூட்டமைப்பு போட்டியிடவில்லை. நாங்கள் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் நிச்சயமாக அதிகளவு வன்செயல்கள் ஏற்பட்டிருக்கும். எமது உறுப்பினர்கள் சிலரையாவது அவர்கள் கொன்றிருப்பார்கள். நாங்கள் தேர்தலில் பங்குபற்றாததால் எவரையும் கொல்லவேண்டி இருக்கவில்லை. இப்போது அவர்கள் வன்முறையற்ற தேர்தல் குறித்து கதைக்கின்றனர். ஆம். உண்மை. இது வன்முறைகளற்றதாக இருந்திருக்கும். நான் அதனை மறுக்கவில்லை. ஆனால், நாங்கள் பங்குபற்றியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கும்.
ஆயுதக் குழுக்கள் தேர்தலில் பங்குபற்றுவதை நாம் எதிர்க்கவில்லை. நிச்சயமாக அவர்கள் தேர்தலில் பங்குகொள்ள முடியும்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காவது பாதுகாப்பை அரசாங்கம் வழங்கும் நிலையில் இல்லை என்பதே இங்கு குறிப்பிடும் விடயமாகும். பாராளுமன்றத்தில் இது தொடர்பாக நாம் கோரியுள்ளோம். சபாநாயகருக்கு கடிதங்களை கையளித்திருக்கிறோம். ஜனாதிபதியை அணுகினோம். பாராளுமன்றங்களுக்கிடையிலான சங்கத்திடம் தெரிவித்தோம். பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தால் நாம் போட்டியிட்டிருப்போம். பிள்ளையான் குழுவோ வேறு எந்தக் குழுக்களோ தேர்தல்களில் பங்குபற்றுவதை நாம் வரவேற்கிறோம். முஸ்லிம் காங்கிரஸை தவிர சுயேச்சைக் குழக்கள் பங்குபற்றின. ஆனால், அவர்கள் யாவரும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களாகும். வரதராஜப்பெருமாள் குழுவோ, புளொட்டோ, ஈ.பி.டி.பி.யோ அவர்கள் யாவரும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களாகும். இன்னொரு கட்சியான ஈரோஸிலிருந்து பிரிந்து சென்ற ஈழவர் ஜனநாயக முன்னணியும் சுயேச்சைக் குழுவாக போட்டியிட்டது. அவர்களும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களாகும். அதனாலேயே அவர்களுக்கு எதுவும் நடக்கவில்லை.