கிழக்கு மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் முழுமையாக விரட்டியடிக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் அங்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் காரணமாகவே அம்பாறை மாவட்டதில் இருந்து விசேட அதிரடிப்படையினரில் சிறுதொகையினர் விலக்கிக்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலைய பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிழக்கில் அரசு விசேட பாதுகாப்பு செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகளால் ஒரு போதும் கிழக்கு மண்ணை மீட்க முடியாதும் எனவும் அதற்கு ஏற்றவகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் இருந்து சுமார் 25 இல் இருந்து 35 வீதமான விசேட அதிரடிப்படையினரையே நகர்த்தவுள்ளதாகவும் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பிள்ளையான் குழுவினரின் வற்புறுத்தலால் விசேட அதிரடிப்படையினர் அகற்றப்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்தை மறுத்த ஹெலிய ரம்புக்வெல,அவ்வாறானல் நடைபெற்று முடிந்த தேர்தலிலேயே அவர்கள் இந்த கோரிக்கையை விடுத்திருக்கவேண்டும் என தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை தேர்தல் நெருங்கிவரும் காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் முக்கிய பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டது தொடர்பில் கேட்க்கப்பட்டதற்கு,
அவர்கள் முந்தைய தேர்தல் காலங்களில் பிழையான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலும் அவர்களது நடவடிக்கை திருப்தி அளிக்காத காரணத்தினாலும் இடமாற்றப்பட்டதாக தெரிவித்தார்.