கொழும்பு, கொட்டாஞ்சேனை, சங்கமித்தை மாவத்தையில் அமைந்துள்ள "நெட்கபே' நிலையத்தில் பணிபுரியும் 3 தமிழ் இளைஞர்களை
கடந்த சனிக்கிழமை இரவு கொட்டாஞ்சேனைப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்திருக்கின்றனர். இவர்களில் இருவர் தீவிர விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
குறித்த "நெட்கபே'யின் உரிமையாளரான தினேஷ் (வயது 20) மற்றும் அதன் பங்காளரான சிவரூபன் (வயது 25) ஆகியோரே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்றும் அந்த "நெட்கபே'யில் பயிலுநராகச் செயற்பட்டு வரும் யாழ். குடாநாட்டைச் சேர்ந்தவரும், தற்போது புறக்கோட்டை பழைய சோனகத்தெருவில் உள்ள லொட்ஜ் ஒன்றில் தனது தாய் மற்றும் சகோதரர்களுடன் வசித்து வருபவருமான கதிர்காமநாதன் யுகராஜ் (வயது 21) என்ற இளைஞன் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தக் கைது தொடர்பில் விடுதலை செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் முறைப்பாடு செய்திருந்தனர். அத்துடன் இன்னும் விடுதலை செய்யப்படாத இளைஞனின் தாயார் கதிர்காமநாதன் கமலாதேவி பிரதி அமைச்சரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து, அவர் அந்த இளைஞனை விடுதலை செய்வது தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டிருக்கிறார் என்று அறிய முடிகிறது.