பண வீக்கம் எமது நாட்டில் 26 வீதமாக அதிகரித்துள்ளது. மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். ஆனால்,
மக்கள் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோருகின்றார். இத்தகைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப நாம் அனைவரும் வீதியில் இறங்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்தியா, சீனா போன்ற நாடுகளின் 6 வீதம் பண வீக்கம் அதிகரித்தாலே போராட்டம் வெடித்து விடும். ஆனால் எமது நாட்டில் 26 வீதமாக பண வீக்கம் அதிகரித்துள்ள போதிலும் இன்னமும் போராட்டம் வெடிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார். கோட்டேயிலுள்ள ஐ.தே.க வின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மக்கள் சக்திப் படைப்பு என்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணிகள், சத்தியாக்கிரகங்கள் மேற்கொள்வது தொடர்பாக தொகுதி, மாவட்ட அமைப்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பூஜை வழிபாடுகளும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படவுள்ளன.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது,
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் 6 வீத பண வீக்கம் அதிகரித்தால் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும். தமது ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்களென்ற காரணத்தினால் பண வீக்கத்தை உடனடியாக குறைத்து மக்கள் சுமைகளை அந்த நாட்டு அரசாங்கங்கள் குறைக்கின்றன. ஆனால் எமது நாட்டில் 26 வீதம் பண வீக்கம் அதிகரித்து மக்கள் துன்பப்படுகின்றார்கள். ஆனால் ஜனாதிபதி அதனை குறைக்க முனையாது கஷ்டங்களை தாங்கிக் கொள்ள வேண்டுமென்கிறார்.
இதனை ஜே.வி.பியும் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றது. மக்களை ஏமாற்ற ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது. ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் அரசை பாதுகாத்த ஜே.வி.பி. இன்றும் அரசாங்கத்தை பாதுகாக்கின்றது. எனவே ஐ.தே.க நாட்டுக்காக, மக்களுக்காக உண்மையான மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் மக்களை வீதியில் இறக்கி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்.
அதற்காக தேசிய ரீதியில் விவாதத்தை ஆரம்பித்துள்ளதோடு தற்போது "மக்கள் சக்தி படை' என்ற திட்டத்தின் கீழ் 10 வீட்டு பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதன் மூலம் தற்போதைய நாட்டின் உண்மையான நிலைமை தெளிவுபடுத்தப்படும். இவ்வாறான ஒரு திட்டத்தை 1976 இல் முன்னெடுத்து நாம் வெற்றி பெற்றோம். சிங்களத்துவத்தை பாதுகாப்பதாக கூறும் அரசாங்கம் மக்களின் முக்கிய திருநாளான சிங்கள தமிழ் புத்தாண்டை கொண்டாட வேண்டாமென கேட்கின்றது. இது எவ்வாறு நியாயமாகும். இலங்கையை ஆட்சி செய்த எந்தவொரு ஆட்சியாளரும் இவ்வாறானதொரு கோரிக்கையை விடுக்கவில்லை. திஸ்ஸ அத்தனாயக
1994 இல் இருந்து ஐ.தே. கட்சி ஆதரவாளர்கள் தமது கட்சியின் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வெற்றியை வழங்குவதற்காகவே "மக்கள் சக்தி படை' திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதன் மூலம் ஐ.தே. கட்சியை வெற்றி பெறும் கட்சியாக மாற்றியமைப்பதே நோக்கமாகும் என இங்கு உரையாற்றிய ஐ.தே கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது,
எமது கட்சியின் அமைப்பு ரீதியான வலைப்பின்னல் மிகவும் சக்தி வாய்ந்தது. அதனை கீழ்மட்டம் வரை கொண்டு சென்று மேலும் பலமிக்கதாக்கி அரசாங்கத்தை தோல்வியடையச் செய்ய வேண்டும். ஏனென்றால் தேர்தல்களுக்கு இன்னமும் 700 நாட்களே இருக்கின்றன. மக்கள் மீதான சுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரசியல் பழிவாங்கல்கள் தொடர்கின்றன. காணாமல் போதல் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துச் செல்கின்றன. ஆனால் அரசாங்கம் எதனையும் கண்டுகொள்ளாதிருக்கின்றது. இதனை எதிர்க்க வேண்டும். அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி ஐ.தே. கட்சி ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்.
எமது அமைப்பாளர்கள் வாக்காளர் பட்டியல்களை ஆராய்ந்து எமக்குள்ள வாக்குகளை உறுதி செய்வதோடு அதற்கு மேல் 10 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நிலைமையை உருவாக்க வேண்டும். எஸ்.பி.திசாநாயக்க சித்திரைப் புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் மக்களுக்கு எதுவித சலுகைகளையும் வழங்காது அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இதற்கெதிராக சமையலறைப் பொருட்களுடன் வீதியில் இறங்கும் பானைகளை உடைத்து சத்தங்கள் எழுப்பி, அரசாங்கத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்க நாம் ஒன்றுபட வேண்டும் என்று இங்கு உரையாற்றிய ஐ.தே. கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 8 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய ஜே.வி.பி 39 உறுப்பினர்களை கொண்டுள்ளது. 1 உறுப்பினர் இருக்க வேண்டிய ஹெல உறுமயவுக்கு 9 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவ்வாறு பாராளுமன்று குழப்பகரமான சூழ்நிலையில் இருப்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதற்காக மக்களை ஒன்றுதிரட்டுவோம் என்று அவர் கூறினார்.
இந்நிகழ்வில் ஐ.தே. கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனனாயக்க மற்றும் எம்.பிக்களான ரவி கருணாநாயக்க, ஜோசப் மைக்கல் பெரேரா, காமினி ஜயவிக்ரம பெரேரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.