கிளிநொச்சி மற்றும் விடத்தல்தீவு பிரதேசங்களில் இருந்து தப்பி வந்த 26 தமிழ் சிவிலியன்கள் பாதுகாப்புப் படையினரிடம் நேற்று தஞ்சமடைந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து இரு பெண்கள் உட்பட 11 பேர் படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த வேளை கடற்படையினர் அவர்களைக் காப்பாற்றி புங்குடுதீவு பிரதேசத்துக்கு நேற்று அழைத்து வந்துள்ளனர்.
புலிகளுக்காக பதுங்கு குழிகள் அமைக்கும் நடவடிக்கைகளில் துப்பாக்கி முனையில் தாம் இரவு பகலாக ஈடுபடுத்தப்படுவதாகவும் இக்கொடுமைகளை சகிக்க முடியாமலேயே இராணுவத்தினரிடம் தஞ்சமடையும் நோக்கில் தாம் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் அவர்கள் தெரிவி;த்துள்ளனர்.
இதேவேளை மன்னார் எருக்கிலம்பிட்டி மற்றும் பள்ளிமுனை ஆகிய பிரதேசங்களில் உள்ள இராணுவத்தினரிடம் 4 பெண்கள் உட்பட 15 தமிழ் சிவிலியன்கள் நேற்று தஞ்சம் அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மன்னார் பொலிஸாரின் கீழ் இயங்கும் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கவனிக்கப்படுவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன என அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது