நீதியானதும், ரசனையின் வழியானதுமான ஊடகக்கல்வியை மென்மேலும் மேம்படுத்தி பல்கலைக்கழக மட்டம் வரை வளர்த்திடுவதற்கான
செயற்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ். பல் கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன்.
ஊடகவள நிலைய டிப்ளோமா கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு கடந்த திங்கட் கிழமை இடம் பெற்றது.
அதில் கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ். ஊடக வழங்கள் பயிற்சி நிலையத்தில் இதழியல் டிப்ளோமா முழு நேரக் கற்கை நெறியின் இரண்டாவது அணியினருக்கான கற்கை நெறி ஆரம்ப விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
பயிற்ச்சி இணைப்பாளர் அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துணைவேந்தர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
எங்களது அறிவு, மனவெழுச்சி, ரசனை என அனைத்து முகங்களிலும் ஊடகங்களின் செல்வாக்கு இன்று மேலோங்கியுள்ளது. நவீன உலகைப் புரிந்துகொண்டு அதில் வினைத்திறனான வாழ்வைக் காண்பதில் ஊடகங்களின் துணை இன்றியமையாதது.
நவீன அறிவியலின் வளர்ச்சியுடன் ஊடகவியலிலும் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக செய்மதி, இலத்திரனியல் புரட்சியின் விளைவாக தகவல் தொடர்பியலிலும் எல்லையயில்லா மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தகவல் தொழில்நுட்பமும், தொடர்பியலிலும் இன்றியமையாத சமூக அறிவியல்களாய் இன்று பரிமாணம் பெற்றுள்ளமையும் கவனதிற்குரியது. மேலை நாடுகள் பலவற்றிலும் பல மாணவர்களை ஈர்க்கின்ற கல்விப் புலமாக ஊடககல்வி இடம் பிடித்துள்ளது. எங்கள் புலங்களில் இப் பொழுதுதான் இந்தத் துறைசார்ந்த ஆர்வமும் கல்வியும் முளைவிட்டுள்ளது.
எங்கள் ஊடகக் கல்வி நிலையத்தில் இன்று அங்குரார்ப்பணமாகும் கல்வி நெறிகளின் முக்கியத்துவமும் மேற்குறித்த பின்னணியில்தான் செயல் வடிவம் பெறுகின்றன.
* ஊடகவியல் சார்ந்த அத்தனை வல்லமைகளையும் எங்கள் வசமாக்குதல்.
* ஊடக அறிவுகொண்ட சமூகமாக எங்கள் மக்களுக்கான அறிவு வெளிச்சத்தைத் தருதல்.
என இருபிரதான இலக்குகளுடன் இந்தக் கற்கை நெறிகளும் பயிற்சிகளும் திட்டமிடப்பட்டு வழங்கப்படுகின்றன.
ஒரு காலத்தில் ஒரு சமூகதின் மேம்பாட் டினை அளப்பதற்கான குறிகாட்டியாக எழுத்தறிவு பயன்பட்டது இன்று மேலதிகமாக ஊடக அறிவு பற்றிய மதிப்பீடும் வேண்டப்படுகின்றது.
எங்களுக்கு வேண்டிய நலமான ஊடக பண்பாட்டினைக் கட்டியமைத்தல் என்ற காலக்கடமையின் பயனாளிகளாய் இந்த பயிற்சி நெறியில் பயில வந்துள்ளவர்களின் கல்வியும் எதிர்காலமும் சிறந்திட வாழ்த்துகின்றேன்.
இந்தக் கல்வி வழி உங்கள் தொடர்பியல் வல்லமைகளும், ரசனையும் மேம்பட வேண்டும்; அதன் வழி எங்கள் சமூகத்தின் ஊடக அறிவும் அதன் வழியான ரசனையும் மேம்பட வேண்டும். இன்று நாம் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளினதும் அடிநாதமாக எங்களது மதிபீட்டுகளும் ரசனையும் உள்ளமையை உணர்வீர்கள்.
நீதியான அழகான நாளை என்பது எங்களது மேம்பட்ட ரசனையின் வழியானது. இந்த நல்ல ரசனையை வளர்க்கும், படைக் கும் ஊடக கல்வியை மென்மேலும் மேம் படுத்தி பல்கலைக்கழக பட்டநிலைவரை வளர்த்திடுவதற்கான செயற்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
உலக நாடுகளில் பாடசாலை மட்டக் கலைத் திட்டத்திற்குரிய ஊடக அறிவு கிட்டத் தட்ட 40 இற்கும் அதிகமான நாடுகளில் இடம்பிடித்துள்ளது.
எங்களது நாட்டிலும் இனியும் தாமத மின்றி இந்த அறிவினைப் பரவலாக்குதல் இன்றியமையாதது என்றார்.