மூதூர் தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணையின் முக்கிய சாட்சியாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சியமளித்த சாட்சியாளருக்கு கடிதம்மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
“எவ்வாறு ஆதாரங்களைப் பெற்றுக்கொண்டீர்கள் எனக் கோரி அச்சுறுத்தல் கடிதமொன்று எனக்குக் கிடைக்கப்பெற்றது. ஆதாரங்களை வழங்குவதைவிடுத்து குடும்பத்துடன் வெளியேறுமாறு கோரி மற்றுமொரு கடிதம் எனக்கு அனுப்பப்பட்டுள்ளது” என அந்தச் சாட்சியாளர் கூறியுள்ளார்.
“இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு நான் முகம்கொடுக்கின்ற போதும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அதனால் அச்சுறுத்தல்கள் பற்றி அவர்களிடம் கூறவில்லை. இதற்கு எதிராகச் செயற்பட்டு என்னிடம் வந்து அச்சுறுத்தல்கள் பற்றிக் கேட்கவேண்டுமென நான் கோரிக்கை விடுக்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
“நான் இருக்கும் இடத்திலிருந்து இங்கு நேரடி பேரூந்து சேவை இல்லை. இதனால் தனியார் வாகனமொன்றை 8 ஆயிரம் ரூபா வாடகைக்கு அமர்த்தியே ஆணைக்குழுவின் விசாரணைக்கு வந்துள்ளேன். ஆணைக்குழுவால் வழங்கப்படும் 4 ஆயிரம் ரூபா போதுமானதாக இல்லை. இதனால் பலர் சாட்சிகளைக் கூற முன்வருவதில்லை” என அந்தச் சாட்சியாளர் கூறியுள்ளார்.
17 பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை நேரடியில் கண்ட ஏனையவர்கள் குறித்த பெயர்விபரங்களை தெரிவிக்க மறுத்திருந்த அவர், தான் சாட்சி சொல்வதற்கு முன்வந்திருப்பதால் இலங்கையில் வாழமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.