எமது விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் பலம் சேர்க்கும் வகையிலும் வெளிநாடுகளையும், வெளிநாட்டு மக்களையும் அணிதிரட்டுகின்ற
பெரும் பணியை தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி மேற்கொண்டு வருகின்றது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி இன்றுடன் மூன்றாவது அகவையை நிறைவு செய்து 4 ஆவது அகவையில் கால் பதிக்கின்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றிய பா.நடேசன் மேலும் கூறியதாவது:
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியானது பெரும் நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு தனது பணியினை முன்னெடுத்து வருகின்றது.
இத்தொலைக்காட்சியின் இலக்கும், கோட்பாடும், கொள்கையும் எமது மக்களை அரசியல் ரீதியாக ஒன்று திரட்டி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் பலம் சேர்ப்பதுடன் மட்டுமல்லாது வெளிநாடுகளையும், வெளிநாட்டு மக்களையும், புலம்பெயர் வாழ் தமிழ் மக்களை ஆதரவாக அணிதிரட்டுவதற்கும் வழிவகுத்து வருகின்றது என்றார் அவர்.
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 3 ஆவது அகவை நிறைவு விழா இன்று முற்பகல் 9.00 மணிக்கு தமிழீழத் தேசியத் தொலைக்கட்சி பொறுப்பாளர் துளசிச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பொதுச்சுடரினை "ஈழநிலா" படைப்பகப் பொறுப்பாளர் நகுலன் ஏற்றினார்.
தமிழீழத் தேசியக் கொடியினை பா.நடேசன் ஏற்றினார். மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச் சுடர்களை நிதர்சன மகளிர் பொறுப்பாளர் ஆதி, தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் ஆங்கில சேவைப் பொறுப்பாளர் யோகன் ஆகியோர் ஏற்றினர்.
மலர்வணக்கத்தினை தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் ஆவணப்பகுதிப் பொறுப்பாளர் கார்த்திக் தொடக்கினார்.
தொடர்ந்து சிறப்பரையினை பா.நடேசன் ஆற்றினார்.
நிகழ்வில் கலைஞர்கள் பாடைப்பாளர்கள் போராளிகள் பொறுப்பாளர் என பலர் கலந்து கொண்டனர்.