படைவீரர்களுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் லங்காதீப செய்தித்தாள் லீடர் ஆங்கில செய்திதாள் மற்றும் லங்கா இ நியூஸ் ஆகியவை செய்திகளை வெளியிடுவதாக ஸ்ரீலங்காவின் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல குற்றம் சுமத்தியுள்ளார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் கேணல் சரத் பொன்சேகா முன்னர் வன்னியையும் கிளிநொச்சியையும் கைப்பற்றப்போவதாக குறிப்பிட்டிருந்தார். தற்சமயம் நிலங்களை கைப்பற்றுவதைக் காட்டிலும் பயங்கரவாதிகளைக் கொல்வது முக்கியமானது எனக்குறிப்பிட்டுள்ளதாக லங்கா தீப தமது கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த கட்டுரையை எழுதியவரின் நோக்கம் இராணுவத்தளபதி தம்மைச் சுதாகரித்துக்கொள்வதாகும் என விமர்சித்துள்ள அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல பயங்கரவாதிகளை அழிப்பதன் மூலமே நிலங்களைக் கைப்பற்றமுடியும் என்பதே இராணுவ தளபதியின் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சண்டே லீடர் செய்தித்தாளில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் போரின் தீவிரத்தை உணராது இராணுவத்தினர் கூறும் பயங்கரவாதிகள் பலியான எண்ணிக்கை தொடர்பில் வித்தியாசங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அதில் சிறுவர்களைப் படைகளுக்குச் சேர்த்தல் உட்பட்ட விடயங்கள் தெரிவிக்கப்படவில்லை என கேஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
இதேவேளை லங்கா இ நியூஸ் செய்தியாளர்களின் தகவல்களைப் படையினர் திரட்டுவதாக நேற்று வெளியிட்ட செய்தி தொடர்பாக தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு ஊடகங்களை அடக்கும் அவசியம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.