இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையான ஆக்கபூர்வமானதும் முன்னோக்கிச்செல்லக் கூடியதுமான தீர்வு யோசனைகளை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13ஆவது அரசியல்யாப்பு திருத்தச்சட்டத்தை ஒருபோதுமே ஏற்கமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய சமாதானப் பேரவையினால் கொழும்பு ஜயவர்த்தன கேந்திர நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்
அரசியல்சாசனத்தின் 13ஆவது திருத்தச்சட்டம் ஒருபோதும் ஏற்க முடியாதது. அது முன்னோக்கிச் செல்கின்ற ஒன்றல்ல. அது பின்னடைவான ஒரு விடயம் என்பது தெளிவானது. இந்த நாட்டை பல தசாப்தகாலத்திற்கு பின்னோக்கி கொண்டு செல்லும். இது ஒருபோதுதுமே செயற்படுத்த முடியாதது. தற்போதைய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு இந்த அரசாங்கம் அர்ப்பணிப்புக்கொண்டுள்ளதா என எனக்கு தெரியவில்லை.
அரசாங்கத்தின் தீவிர அர்ப்பணிப்பு தொடர்பில் எனக்கு கடுமையான சந்தேகங்கள் உள்ளன. ஆனால், இந்தப் பிரச்சினை அமைதியான வழிமுறைகளில் தீர்க்கப்பட வேண்டும்.இந்த பிரச்சினை ஒருபோமே யுத்தத்தின் மூலமாக தீர்க்கப்பட முடியாதது என்பது எனது உறுதியான நிலைப்பாடாகும். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு அடிப்படையான ஆக்கபூர்வமானதும், முன்னோக்கிச் செல்வதுமான யோசனைகளை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்றார். இங்கு கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஜுலியன் வில்ஸன் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட தூதுக்குழுவினர் பல அவதானங்களை வெளியிட்டிருந்தனர். அவர்களது செய்தியானது யுத்த நிறுத்த ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து விளக்குகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் இலங்கையின் நண்பனாகவே திகழ்கின்றது.
நண்பர்கள் மாத்திரமே ஐரோப்பிய ஒன்றியம் வழங்குகின்ற அளவிற்கு ஆதரவை வழங்க முடியும். அவை பில்லியன்கள் பெறுமதியான வர்த்தக சலுகைகள், நூற்றுக்கணக்கான மில்லியன்கள் பெறுமதியான உதவிகள் இலங்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவின் பிரசன்னத்தை வலுவூட்டியுள்ளமை இந்த முயற்சியில் பங்கேற்பதும் நட்புறவின் செயற்பாடுகளாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் பல்வேறு கரிசனைக்குரிய விடயங்களை தமது விஜயத்தின் இறுதியில் சுட்டிகாட்டியிருந்தனர்.
இந்த கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாம் விரும்புகின்றோம். ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் மனிதாபிமான விடயங்களிலும் மனித உரிமைகள் விடயத்திலும் கவனம் செலுத்தினர். சர்வகட்சி குழுவினரின் எதிர்பார்ப்பு நிறைந்த இறுதி அறிக்கையை நோக்கிய விடயங்களிலும் கவனம் செலுத்தினர். ஜனாதிபதி ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படுகின்ற 17 பாரதூரமான மனித உரிமை மீறல்கள் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளனர். அனுசரணையாளர்களான நோர்வே தரப்பினர் கிளிநொச்சி சென்று வருவதற்காக அனுமதி வழங்கப்படல், ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், செஞ்சிலுவைக்குழு ஆகியவற்றுக்கான சாதகமான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும்.