அரச சொத்துக்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் முரண்பாடான இரண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசிடமுள்ள பொது நிலையான செலாவணி ஒதுக்கீடு 4.8 மாதகாலத்திற்கான அரசின் இறக்குமதி மதிப்பீடுகளைச் சமாளிப்பதற்குப் போதுமானதென இலங்கை மத்திய வங்கி மார்ச் 14 ஆம் திகதி வெளியிட்ட இலங்கைப் பொருளாதாரக் குறிகாட்டி விவரப்படிவத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், அதற்கு 5 தினங்களின் பின்னர் அதாவது 19 ஆம் திகதி மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நிதிக்கொள்கை விவரங்கள் 2008 மார்ச் என்ற படிவத்தில், அரசிடமுள்ள பொது நிலையான செலாவணி ஒதுக்கீடு 3.7 மாத காலத்திற்கான அரச இறக்குமதி மதிப்பீடுகளைத் தீர்த்துவைக்கப்போதுமானவையெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முந்திய வாரத்தில் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கைகளிலும் அரசின் பொதுநிலையான செலவாணி ஒதுக்கீடு தொடர்பான அறிக்கைகளிலும் முரண்பாடுகள் இருந்தன என அவர்கள் தெரிவித்தனர்.
மார்ச் 07 ஆம் திகதி வெளியிட்ட பொருளாதாரக் குறிகாட்டிப் படிவத்தில் அரசின் பொதுநிலையான ஒதுக்கீடு 4.8 மாத காலத்திற்கான இறக்குமதி மதிப்பீடுகளைத் தீர்த்துவைப்பதற்குப் போதுமானதெனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயினும், மார்ச் 10 ஆம் திகதி மத்திய வங்கி வெளியிட்ட பத்திரிகை அறிவித்தலில் அரசின் பொது நிலையான செலாவணி 3.6 மாதகாலத்துக்கான இறக்குமதி மதிப்பீட்டைத் தீர்த்து வைப்பதற்குப் போதுமானதாக இருந்தது எனக் கூறப்பட்டது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்