இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்தத்தால் வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கலாம்.
இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின்
போதைவஸ்து மற்றும் குற்றச் செயல்களுக்கான தெற்காசியப் பிரதிநிதி கரி லூயிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரிவித்துள்ளவை வருமாறு:
இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்கள், மிக நீண்ட காலமாக, அதாவது, 1983ஆம் ஆண்டிலிருந்து உக்கிரமாக இடம்பெற்று வரும் யுத்தத்தினால் தமது குடியிருப்புகளைவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்தச் போர்ச்சூழல் தொடர்வதால், அங்கிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கு மக்கள் முயற்சிக்கின்றனர்.
இதனால், திருட்டுத்தனமாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு உதவும் முகவர்களின் செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சுகின்றோம்.
குறிப்பாக, தற்போது போர் மீண்டும் உக்கிரமடைந்து வருவதால், இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கான கட்டாயச் சூழ்நிலை உருவாகிவருகிறது. வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று குடியேற முயற்சிப்பது, களவான மனிதக் கடத்தல்களுக்கு ஏதுவான சூழலை உருவாக்கி விடுகிறது.
கிடைக்கப்பெறும் கணிப்பீடுகளின் படி, வருடத்திற்கு குறைந்தது 1,50,000 பேர் ஆசியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு களவாகப் பயணித்துச் செல்கின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 2 கோடி சனத்தொகை கொண்ட இலங்கை, மனிதக் கடத்தல்கள் விடயத்தில், ஆசியாவில் மிகக்குறைந்த குற்றங்களையே பதிவு செய்திருக்கிறது. இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் என்பன முறையே மிக அதிக வெளிநாட்டு மனிதக் கடத்தல்களைப் பதிவு செய்த நாடுகள் பட்டியலில் உள்ளன.
போர் மோசமாக நடைபெற்று வருவதுடன் 70 ஆயிரத்திற்கு அதிகமான உயிரிழப்புகள் இலங்கையில் ஏற்பட்டுள்ள போதிலும், மனிதக் கடத்தல் விடயத்தில் ஐந்தாம் இடத்திலேயே இலங்கை உள்ளது. இருப்பினும், தற்போது மீண்டும் போர் உக்கிரமடைந்துள்ளதால், இந்த மனிதக் கடத்தல்கள் மிக வேகமாக அதிகரிக்க வாய்ப்பிருக்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இலங்கை அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் போர் உக்கிரமடைந்து வருவதால், 2006 ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பின்னர் ஒரு லட்சத்து 88 ஆயிரம் பொதுமக்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்னும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், தற்காலிக அகதி முகாம்கள் மற்றும் தற்காலிக கொட்டகைகள், குடிசைகளில், நிரந்தரமாக நீண்டகாலம் தங்கியிருப்பதுடன், மிக மோசமான துன்பங்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர்.
தற்காலிக முகாம்களை, நிரந்தரமான வீடுகள்போன்று நீண்ட காலம் தங்குவதற்கு அகதிகளுக்கு வழங்கும்போது, ஒரு வீட்டில் வாழ்கின்ற சுமூகமான சூழ்நிலையை பிள்ளைகள் இழந்து விடுகின்றனர். சிறுவர்களுக்கு கிடைக்கக்கூடிய அன்பும், பரிவும், கவனிப்பும் நிரந்தரமாகக் கிடைக்காமல் போவதுடன், அவர்கள் மீதான துஷ்பிரயோகமும், தவறான குற்றச்செயல்களும் நிகழ்வதற்கு வாய்ப்புகள் உருவாகி விடுகின்றன.
இத்தகைய சிறுவர்களும், இளைஞர்களும் பல்வேறு துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர், இவர்களைக் களவாக வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்வதற்கான சூழ்நிலைகளும் அதிகரிக்க வாய்ப்பு உரு வாகிறது. இலங்கையைப் பொறுத்தவரை, வறுமை, இயற்கை அழிவுகள், தொழில் இன்மை, பாலியல் தொழில் வாய்ப்புகள் போன்றன, வெளிநாட்டு மனிதக் கடத்தல்களுக்கான பிரதான காரணங்களாக இருக்கின்ற போதிலும், போர் உக்கிரமடைந்து செல்கின்ற சூழல், இத்தகைய மனிதக் கடத்தல்களை மேலும் அதிகரிக்க ஏதுவாக அமையும். என்றார்