"இலங்கையில் தற்போது பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகள் எழுந்துள்ளன இருப்பினும் அத்தகைய எந்தப் பிரச்சினைகளும் இல்லை என
இலங்கை அரசு கூறுகின்றது. உள்நாட்டு விடயங்களில் நாம் தலையிட விரும்பவில்லை.'' இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஜே. வில்சன் தெரிவித்திருக்கிறார்.
""இலங்கைக்கு நாம் உதவி வழங்குவதில் நாம் நண்பராகச் செயற்பட்டுவருகின்றோம்.ஆனால் இலங்கையின் உள்ளார்ந்த பிரச்சினைகளில் நாம் தலையிட விரும்பவில்லை'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை சமாதானப் பேரவையின் தேசிய பிரச்சினை மற்றும் 13ஆவது திருத்தம் தொடர்பிலான கருத்தரங்கு, "இருதசாப்த யுத்தத்தால் ஐந்து வருட யுத்த நிறுத்தம் அடுத்து என்ன?' என்ற நூல் வெளியீடும் நேற்றுமாலை கொழும்பு, ஜே. ஆர். ஜெயவர்த்தன கேந்திர மண்டபத்தில் இடம் பெற்றன இந் நிகழ்வில் கலந்துகெண்டு உரையாற்றிய போதே ஜே. வில்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் அங்கு உரையாற்றுகையில் மேலும் கூறியவை வருமாறு:
2002 ஆம் ஆண்டிலிருந்து நாம் இலங்கையில் செயற்பட்டுவருகின்றோம். 2003இல் எம்மிடம் இலங்கையின் சமாதானம் மற்றும் போர் நிறுத்தம் என்பன குறித்து எம்மிடம் கலந்துரையாடப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் நடுநிலைமையாக செயற்படும் படியும் எங்களிடம் கேட்கப்பட்டது.
நாம் இலங்கைக்கு தொடர்ச்சியாக வர்த்தகம் மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி உதவிகள் புரிந்து வருகின்றன்றோம். இதுவரை வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திப் பணிகளுக்கு 40 கோடி ரூபா நிதியை வழங்கியிருக்கின்றோம்.
இலங்கை தற்போது ஒரு சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறது ஆனால் அப்படியான நிலைமை ஒன்றும் இல்லை என்று இலங்கை அரசு கூறிவருகின்றது.
எல்லோரும் ஒன்றிணைந்து இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும். எமது ஐரோப்பியக் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இங்கு குறிப்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தமது பணிகளை நிறுத்தியபின்னர் அவர்களது பணிபுரிந்த இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு வந்தது. அத்துடன் நோர்வே அரசு மீது இருக்கின்றன வீண்பணிகளை இல்லாதிருக்கச் செய்ய வேண்டும்.
மேலும் 27 ஆவது வர்த்தகக் கொள்கை தொடர்பில் இலங்கை அரசிற்கு பொறுப்பு இருக்கின்றது.
போர்நிறுத்த உடன் படிக்கை தற் போது நடைமுறையில் இல்லையென்றாலும் நாம் இலங்கைக்கு உதவிகள் வழங்குவோம். அத்துடன் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மோதல்கள் மற்றும் முரண்பாடுகளை நிறுத்துமாறு நாம் சம்பந்தப்பட்டோரை பொறுப்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைகள் ஏற்பட்டன அத்தகைய மனித நேய உதவிகளை எம்மால் பெற்றுக் கொடுக்க முடியும். அத்துடன் நாங்கள் இலங்கைக்கு உதவிகள் வழங்குவதையே நோக்காக் கொண்டிருக்கின்றோம்.
""இலங்கையில் சமாதான முயற்சிகளுக்கான கதவுகள் திறந்தேயுள்ளன அதற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம். என்றார்.