கனடா செல்லும் அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் நேற்று புதன்கிழமை(26.03.08) விடுத்துள்ள அறிக்கை:
கடந்த மார்ச் மாதம் 15 ஆம் நாள் Can Indo Lanka என்ற அமைப்பு தமிழினப் படுகொலையை அரங்கேற்றி வரும் சிறிலங்கா தூதரகத்தின் ஆதரவோடு 2008 CSL Awards Gala என்ற நிகழ்ச்சியை DoubleTree International Hotel, Toronto இல் நடத்த இருந்ததும் அதில் சிங்களப் பேரினவாதி எனப் பெயரெடுத்த அர்ஜூன ரணதுங்க சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருந்ததும் பின்னர் அந்த நிகழ்ச்சி மார்ச் மாதம் 28 ஆம் திகதிக்குத் (வெள்ளிக்கிழமை) தள்ளிப் போடப்பட்டதை அறியத்தந்திருந்தோம்.
இந்த மாத மத்தியில் கனடா வந்த அர்ஜூன ரணதுங்க, இங்குள்ள கனடிய துடுப்பாட்டு அவையோடு ஒரு உடன்படிக்கையை செய்து கொண்டு பின்னர் துபாய் சென்று இறுதியாக சிறிலங்கா சென்றடைந்தார்.
இப்போது மீண்டும் கனடாவுக்கு மார்ச் மாதம் 28 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிற இரவு விருந்தில் கலந்து கொள்ள வருகிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது.
எனவே எமது கறுப்புக்கொடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி மார்ச் 28 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இல. 655 Dixon Road, Double Tree International Hotel, Toronto முன்பாக நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம். இதற்குரிய அனுமதியைக் காவல்துறை (23 Division) யிடம் இருந்து பெற்றுள்ளோம்.
அர்ஜூன ரணதுங்க ஒரு கடைந்தெடுத்த சிங்களப் பேரினவாதி எனப் பெயர் எடுத்தவர். சிங்கள இனவாத சக்திகளுடன் கைகோர்த்துக்கொண்டு நிற்பவர். பிபிசி மற்றும் செய்தித்தாள்களுக்குச் பலமுறை செவ்வி கொடுத்த அர்ஜூன ரணதுங்க தான் தேசபிரேமி ஜனதா அமைப்பின் (Patriotic National Front(PNF) வளர்ச்சிக்குத் தொடர்ந்து உழைக்கப் போவதாகக் கூறயிருக்கிறார்.
தேசப்பிரேமி அமைப்பு சிங்கள - பெளத்த - பேரினவாத ஜாதிக விமுக்தி பெரமுன அமைப்பின் முன்னணி (front) அமைப்பாகும். தேசபிரேமி ஜனதா அமைப்பு, சுதந்திரக் கட்சி, ஜாதிக விமுக்தி பெரமுன போன்ற கட்சிகளின் உதவியுடன் ஐக்கிய தேசியக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள், மனிதவுரிமை அமைப்புக்கள், போருக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அமைப்புக்கள் போன்றவற்றுக்கு எதிராக செயற்பட சிங்கள எழுத்தாளர்கள், கவிஞர்கள், தொழிலாளர்கள், கமக்காரர்கள், ஆசிரியர்கள், ஆயுள்வேத வைத்தியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை அணிதிரட்டும் பணியைச் செய்கிறது. இந்த அமைப்பு முன்னர் கருணா கூலிப்படையை ஆதரித்தது. இப்போது பிள்ளையான் கூலிப்படைக்குச் சாமரம் வீசுகிறது.
சிறிலங்கா துடுப்பாட்ட அவைக்குத் தலைவராக நியமனம் பெற்ற கையோடு இடைக்கால அவையின் செயலாளராக இருந்த தமிழரான கே.மதிவாணனை, அர்ஜூன ரணதுங்க மூலையில் தள்ளி, ஓரங்கட்டிச் செயலிழக்கச் செய்து அவரைப் பதவியில் இருந்து அர்ஜூன ரணதுங்க வெளியேற்றக் கூடும் எனக் கொழும்பில் இருநது வெளிவரும் Daily Mirror (March 24, 2008) செய்தி வெளியிட்டுள்ளது. (Secretary of the interim committee of Sri Lanka Cricket, K. Mathivanan has been cornered and sidelined from his functions and it is feared that he could be ousted from the job by the interim committee head Arjuna Ranatunga, the Daily Mirror learns)
எனவே மார்ச் மாதம் 28 ஆம் நாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள கறுப்புக்கொடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு போர்வெறி பிடித்த சிங்கள பேரினவாத ஆட்சியாளருக்கு எதிரான பொங்கு தமிழினத்தின் உணர்வலைகளைக் காட்டமாகக் காட்டுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.