மொனறாகல மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் நீங்கியுள்ளதாக தெரிவிக்கும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எட்வின் குணதிலக, பொலிஸாரும் படையினரும் மொனறாகல காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
மொனறாகல மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டம் தேசத்தைக் கட்டியெழுப்பும் விவகார அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது அதில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தொடர்ந்து பேசுகையில்; மொனறாகல காட்டுப்பகுதியில் படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போது 47 விடுதலைப் புலி உறுப்பினர்கள் இக்காடுகளில் நடமாடுவதாக சில வதந்திகள் தெரிவிக்கின்றன. அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. தேடுதலின் போது அவர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டு விட்டனர்.
வீண் வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம். எவரும் பயமின்றி கதிர்காமம் வரலாம். மொனறாகல மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எந்த சவாலையும் சமாளிக்க பொலிஸாரும் படையினரும் தயாராகவுள்ளனர் என்றார்.