ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான இரண்டாவது மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கலந்துகொள்ளவுள்ளதாக அவ்வமைச்சு அறிவித்துள்ளது.
இந்த மாநாடு ஏப்ரல் மாதம் 5 ஆம் 6 ஆம் திகதிகளில் எகிப்தில் நடைபெறவுள்ளது. இதன் முதலாவது மாநாடு 2005 ஆம் ஆண்டு சிங்கபூரில் நடைபெற்றது. ஆசிய மற்றும் மத்திய கிழக்கு வலய நாடுகளுக்கிடையில் கூட்டுறவை மேம்படுத்துவது இந்த மாநாட்டின் பிரதான நோக்கமாகும். இராஜதந்திர மட்டத்தில் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக நிதியைப் பெற்றுக்கொள்வதே இந்த மாநாட்டில் இலங்கை கலந்துகொள்வதற்கான பிரதான நோக்கமாகும். வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இது தொடர்பான விசேட உரையொன்றை இம்மாநாட்டில் நிகழ்த்தவுள்ளார்.
இந்த வலய நாடுகளின் முதலீட்டையும் இலங்கை எதிர்பார்த்துள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் வெளிநாடுகளின் அமைச்சர்களுடனும் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார். அத்துடன், பயங்கரவாதத்துக்கு எதிரான உரையொன்றையும் இந்த மாநாட்டில் அமைச்சர் நிகழ்த்தவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது என அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.