கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செயற்பாடுகள் வியாழக்கிழமை காலை 8.30 மணிமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான இந்த கிழக்கு மாகாணசபை தேர்தலானது எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 11 உறுப்பினர்களும் அம்பாறை மாவட்டத்தில் இருந்து 14 உறுப்பினர்களும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 10 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 2 போனஸ் ஆசனங்களம் வழங்கப்படவுள்ளது.
இன்று காலை 8.30 தொடக்கம் இன்று பிற்பகல் 4 மணிவரை கிழக்கு மாகாணசபைக்கான எந்தவித வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்படவில்லையென சிறிலங்காவின் தேர்;தலகள் செயலகம் தெரிவித்துள்ளது.
இதுவரை திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 8 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் அந்த அலுவலம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் திருகோணமலை மாவட்ட செயலகத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட தேர்லுக்கு பொறுப்பான சிறிலங்காவின் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சர் தெரிவித்துள்ளார்.
இதற்காக சுமார் 150 காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை ஒரு சுயேட்சைக்குழுவும் ஒரு அரசியல் கட்சியும் இதுவரை வேட்பு மனுக்கான விண்ணப்பங்களை பெற்றுச்சென்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ரி.கிருஸ்ணானந்தலிங்கம் தெரிவித்தார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சர் எச்.வி.ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை நாளை மறுதினம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தமது கட்சியில் போட்டியிடுவோர் தொடர்பான பெயர் விபரங்கள் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம ஜயந்த,
தமது கட்சியில் போட்டியிடுவோர் தொடர்பில் கூட்டணிக்கட்சியினருடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாகவும் நாளை வெள்ளிக்கிழமை வேட்பாளர்கள் நேர்முகப்பரிட்சை செய்யப்பட்டு தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.