தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் குழுவின் பிரதித்தலைவர் பிள்ளையானை அண்மையில் அமைச்சர் பி சந்திரசேகரனும் பிரதி அமைச்சர் பி ராதாகிருஸ்ணனும் சந்தித்த வேளையில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அவர்கள் முகங்கொடுக்க வேண்டியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் சந்திரசேகரனும் ராதாகிருஸ்ணனும் பிள்ளையான் தங்கியிருந்த கொழும்பின் ஹோட்டலுக்குச் சென்ற போது சந்திப்புக்கு முன்னர் முழுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் உடல் சோதனையும் அடங்கும். அத்துடன் அவர்கள் எடுத்துச்சென்ற புகைப்படக் கருவியும் பிள்ளையானின் மெய்பாதுகாவல்களால் அனுமதிக்கப்படவில்லை. இதனையடுத்து சந்திப்பின்போது பிரதியமைச்சர் ராதாகிருஸ்ணன் தமது கையடக்கத் தொலைபேசியிலேயே புகைப்படம் எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமைச்சர் சந்திரசேகரனின் இந்தச் சந்திப்பு நடவடிக்கை குறித்து தமிழர் தரப்பு மத்தியில் இருந்து பாரிய எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.