இலங்கை அரசாங்கம், தமிழ் மக்களை கௌரவத்துடன் நடத்த வேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது. அத்துடன், இலங்கை அரசாங்கம் வேறு தரப்புக்களிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது, தெற்கõசியாவில் இந்தியாவின் பலத்துக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்றும் இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திய வான் படைத் தளபதி பி.சி. லாலின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இத்தகவலை வெளியிட்டார். இலங்கை இனப்பிரச்சினையை இராணுவ அணுகுமுறை மூலம் தீர்க்க முடியாது என்பதில் இந்தியா உறுதியாகவுள்ளது என்று கூறிய அவர், இலங்கையில் அதிக எண்ணிக்கையில் வாழும் தமிழர்களை இலங்கை கௌரவத்துடன் நடத்த வேண்டும் என்றும் சொன்னார்.
பிராந்தியத்தில் இந்தியாவின் மேன்மையான நிலையை நாம் உறுதிசெய்ய வேண்டியது இன்றியமையாதது. வேறு நாடுகளிடமிருந்து இலங்கை ஆயுதக் கொள்வனவை மேற்கொள்வதன் மூலம் அதனை விட்டுக் கொடுக்க முடியாது என்றும் எம்.கே. நாராயணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:இலங்கை இனப்பிரச்சினைக்கு எந்தவொரு அதிகாரப்பகிர்வு தொடர்பான தீர்வையும் முன்வைக்காது, தனியாக இராணுவத் தீர்வை மட்டுமே இலக்காக வைத்து, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகப் போரைத் தொடர்கிறது இலங்கை அரசாங்கம்.
தெற்காசியாவில் இந்தியாவின் இராணுவ உச்சக்கட்டப் பலத்தை இலங்கை அரசாங்கத்தின் அபரிமிதமான ஆயுதக் கொள்வனவு எதுவிதத்திலும் தளம்பல் நிலைக்குத் தள்ளக் கூடாது என்பதில் இந்திய அரசாங்கம் உறுதியாக இருக்கும்.
தமிழர்களுக்குக் கௌரவமான ஒரு தீர்வை இலங்கை வழங்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம்.
இலங்கையின் தற்போதைய நிலைமையை நாம் அவதானிக்கும்போது, அமைதி முயற்சிகள் அனைத்தும் முறிவடைந்து போகின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. இது மிகவும் மோசமான ஒரு நிலைமைக்கு எம்மை இட்டுச் செல்லும்.
எனவே, இலங்கையில் மிகப் பெரிய சிறுபான்மைத் தமிழினமான இலங்கைத் தமிழர்களை இலங்கை அரசாங்கம் கௌரவத்துடன் நடத்த வேண்டும் என்பதே எமது விருப்பம்.
கடந்த இரண்டு வருடத்தில் இலங்கை அரசாங்கப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு காண்பதனை இந்தியா எதிர்ப்பதுடன் சிறுபான்மை இனத்திற்கு அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தும்படியும் கொழும்பை இந்தியா வலியுறுத்துகிறது.
இலங்கை அரசாங்கத்தின் மீது எவ்வளவு அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம் என்பது தொடர்பாகவும் எவ்வளவு இராணுவ உதவிகளை வழங்கலாம் என்பது தொடர்பிலும் எமக்கு இடையே ஒரு தேசிய முடிவு எட்டப்பட வேண்டும்.
இராணுவப் பயிற்சிகளை இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கி வருகின்ற போதிலும், வலிந்த தாக்குதல் தொடுக்கவல்ல இராணுவத் தளபாடங்கள் என்று கருதப்படுகின்றவற்றை இலங்கைக்கு வழங்க இந்தியா மறுத்தே வருகின்றது.இவ்வாறு அவர் கூறினார்.