கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த அணியுடன் கூட்டமைத்துப் போட்டியிடும் என்பது பெரும்பாலும் இவ்வார இறுதியில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை அளவில் தீர்மானிக்கப்படும் எனத் தெரிகின்றது.
எனினும், ஏனைய முஸ்லிம் கட்சிகளுடனோ, ஆளும் தரப்புடனோ முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு தரப்பும் தொடர்ந்து பேசி வருகின்றன என்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்றுக் காலையும் ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவைச் சந்தித்து இவ்விவகாரம் குறித்துப் பேசினார் என்றும்
எனினும், உறுதியான முடிவு ஏதும் எட்டப்பட வில்லை என்றும் அந்த மூத்த உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி யிடுவதையே அதிகம் விரும்புகின்றது. ஐ.தே.கட்சியும் தனித்துப் போட்டியிடலாம். காத்திரமான தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி, தமிழ்த் தேசியம் தொடர்பான தனது நிலைப்பாட்டை ஐ.தே.க. தெளிவுபடுத்துமானால் கணிசமான வாக்குகளை ஐ.தே.கட்சி பெறமுடியும். அதன்பின்னர் கூட்டுச் சேர்ந்து அங்கு மாகாண ஆட் சியை அமைப்பது குறித்து ஐ.தே.கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் முயற்சிக்கலாம் என்ற ஒரு சிந்தனையும் நிலவுகின்றது."எனினும் மு.காங்கிரஸும் , ஐ.தே.கட்சியும் பிரிந்து நின்று தனித்தனியாகத் தேர்தலில் போட்டியிட்டால் போனஸ் ஆசனங்கள் இரண்டைக் கோட்டை விட வேண்டி நேரிடலாம் என ஐ.தே.கட்சி சுட்டிக்காட்டு கின்றது. இதன் காரணமாகவே இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடவேண்டும் என ஐ.தே.க.வற்புறுத்துகின்றது. இது குறித்து நாம் ஆழமா கப் பரிசீலித்து வருகிறோம். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழ மைக்கு முன்னர் ஒரு இறுதி முடிவுக்கு நாம் வந்து விடுவோம்.'' என்றார் அவர்.