திருகோணமலை, சம்பூரில் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலைய நிர்மாணப் பணிகள் அடுத்த மூன்று மாத காலப்பகுதிக்குள் ஆரம்பமாகுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ள இந்த அனல் மின் நிலையத்தின் மூலம் சுமார் ஆயிரம் மெகாவோட்ஸ் அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. 2012 ஆம் ஆண்டளவில் இந்த மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தைப் பெற்றுகொள்ளலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அனல் மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகளை இலங்கை மின்சார சபையின் கண்காணிப்பின் கீழ் இந்திய நிறுவனமான என்.பி.ரி.சி. மேற்கொள்ளவுள்ளது.
இந்நிலையத்தினை அமைப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் சுமார் 700 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும். முதல் கட்டப் பணிகளுக்காக சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளது. இதில் 70 வீதமானவை இந்தியா மற்றும் இலங்கை மின்சார சபையின் நிதிகள் தவிர்ந்த ஏனைய வெளிநாட்டு நிதிகள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது என அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.