தற்போதைய நிலையில் பிள்ளையான் குழுவிடமிருந்து ஆயுதங்களை களைவது நியாயமில்லையெனத் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பிரபாகரனிடமிருந்து ஆயுதங்களை களைந்த பின்னரே பிள்ளையான் குழுவிடமிருந்து ஆயுதங்களைக் களைய வேண்டுமெனவும் கூறினார்
கலிகமுவ தேர்தல் தொகுதியில் ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புனரமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த நெடுஞ் சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மேலும் கூறியதாவது;
நாட்டில் சட்ட ரீதியான இராணுவம் ஒன்றுமட்டுமே இருக்க முடியும். இதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால்,நாட்டின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை வைத்துக்கொண்டிருக்கும் போது கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் குழுவிடமிருந்து ஆயுதங்களை களைய வேண்டுமென ஒரு பிரிவினர் வலியுறுத்துகின்றனர்.
இது நியாயமில்லை. சட்டரீதியற்ற ஆயுதக்குழுக்களை நாட்டில் வைத்திருக்க பொறுப்புள்ள அரசாங்கமென்ற வகையில் நாம் விரும்பவில்லை. நாட்டில் ஆயுதக் கலாசாரத்தை முற்றாக அழிப்பதற்கான முயற்சியில் நாம் இறங்கியுள்ளோம்.
இதற்கு இணங்கியே ஜனநாயக நீரோட்டத்தில் இறங்கி, கிழக்குப் பிரதேச மக்கள் ஆணை பெற்ற தமிழ்க் குழு எம்முடன் இணைந்து செயல்படுகின்றது. எனவே இவ்வாறானா ஜனநாயக குழுவொன்றுக்கு புலிகளிடமிருந்து பாரிய அச்சுறுத்தல் நிலவுகிறது.
எனவே அவர்கள் பாதுகாப்பு பெறவேண்டும். இந் நிலையில் பயங்கர ஆயுதக் குழுவான புலிகளின் ஆயுதங்களைக் களையாது பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களையக் கோருவது புலிகளுக்குக் சார்பான ஒரு நடவடிக்கையாகும்.
நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்த நிலையிலும் பொதுமக்கள் இன்றும் பொறுமையாக எம்முடன் இருக்கிறார்கள். நாம் செல்லும் வழிக்கும் எமது கொள்கைக்கும் இந் நாட்டுமக்கள் அங்கீகாரம் வழங்குகின்றார்கள் என்பதற்கு இது உறுதியான சான்றாகும்.
அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி அதிகம் என்கிறார்கள் உண்மைதான். ஆனால், இன்றையஅரசியல் சூழ்நிலையில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அதனைத் தவிர்க்க முடியாது.
இன்னும் எத்தனை எதிர்க்கட்சி எம்.பிக்கள். அரசாங்கத்துடன் இணைந்தாலும் அவர்களுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்கத்தயாராக உள்ளோம்.
அமைச்சர்களுக்கு சம்பளம் அதிகம் அதனால் நாட்டில் பொருளாதரக் கஷ்டம் என சிலர் கூறுகின்றனர். ஆனால் அமைச்சர்களை விடவும் அதிகசம்பளம் பெறும் அதிகாரிகள் இருப்பதை இவ்வாறு சுயநல விமர்சனம் செய்யும் அதிகாரிகள் அறியாதிருப்பது கவலைக்குரியதாகும்.