கிளிநொச்சியில் மாவட்டத்தில் அவசரதேவைகளுக்கான உணவுப்பொருட்களின் கையிருப்புகள் தீர்ந்து போயுள்ளதாக அரசாங்க அதிபர் என் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்திற்குத் தேவையான உணவுப்பொருட்களைக் கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தடங்கல் நிலையே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், தம்வசம் உள்ள பொருட்கள் பாரியளவில் குறைந்துள்ளதாக அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளன. இதனால் பாரிய உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அந்த சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
சுமார் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 812 பேர் வசிக்கும் கிளிநொச்சியில் ஒவ்வொரு மாதமும் சுமார் இரண்டாயிரம் மெற்றிக்தொன் உணவுப்பொருட்கள் தேவைப்படுகின்றன. எனினும் கடந்த ஜனவரி முதல் தாம் கோரிய உணவுப்பொருட்களை ஓமந்தையின் ஊடாகக் கொண்டு வருவதற்குத் தடைகள் ஏற்பட்டுள்ளமையால், உணவுத்தட்டுப்பாடு எழுந்துள்ளதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இந்த நிலைமையைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளன. அதேநேரம் போக்குவரத்து இன்மையால்,பல்வேறு இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சிக்கு வந்துள்ள சுமார் 28 ஆயிரம் பேருக்கு வழங்குவதற்கான உணவிலும் பாரிய தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விவசாய உற்பத்திகளும் போக்குவரத்துத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அவசிய மருத்துவப்பொருட்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கியுள்ள போதும் உணவுப்பொருட்களுக்கான அனுமதியைத் தாமதப்படுத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.