தமிழக மீனவர் தாக்குதலுக்குள்ளாகும் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் என்று எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று புதுடில்லி சென்றுள்ளார்.
புதுடில்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க , தமிழக மீனவர்கள், கடற்பரப்பில் தாக்கப்படுகின்றமை தொடர்பான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வைக் காணமுடியும்.
நான் புதுடில்லியில் நடைபெறும் திருமண வைபவம் ஒன்றில் பங்கு பற்றுவதற்கான தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டுள்ளேன். இந்த விஜயத்தின்போது இந்தியப் பிரதமரை சந்திக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார்.
இதேவேளை புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள ரணில் விக்கிரமசிங்க அங்கு முக்கியஸ்தர்கள் பலரை சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பகிஸ்தானிடமிருந்து இலங்கை ஆயுதக் கொள்வனவினை மேற்கொள்வதனை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கண்டித்துள்ள நிலையில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது