தேடுதல் சோதனை நடவடிக்கைகளின் போதும், வீதிச்சோதனைச் சாவடிகளிலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள போதிலும், அவை புறக்கணிக்கப்படுகின்றன
என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
கொழும்பு உயர்நீதிமன்றத்தின் முன்னிலையில் கடந்த சில மாதங்களாகப் பொலிஸாரின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சில வழக்குகளையும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்போது பொலிஸார் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து ஆள்களைக் கைதுசெய்தனர், சித்திரவதையில் ஈடுபட்டனர் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமையைச் சுட்டிக்காட்டியுள்ள ஆசிய மனித உரிமை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் அதிகாரத் துஷ்பிரயோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து மிக நீண்ட அறிவுறுத்தல்களை உயர்நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் வழங்கியிருந்தது.
குறிப்பாகத் தேடுதல், கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் முளைத்துள்ள சோதனை நிலையங்களில் வைத்துக் கைதுசெய்தல் போன்றவை தொடர்பாக விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
சோதனைச் சாவடிகள் லஞ்சம் வாங்கும் இடங்கள்பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவை லஞ்சம் வாங்கும் இடங்களாக மாறியுள்ளன.
உயர்நீதிமன்றத்தில் இந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு, அதிகாரிகள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைத் தமது நலனுக்காகப் பயன்படுத்துகின்ற போக்கைக் கைவிடவில்லை என்பதைப் புலப்படுத்துகின்றது.
ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ள சம்பவங்கள் நான்கும் லஞ்சம் வாங்குவது தொடர்பானவை என்ற போதிலும் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் நடைபெறும் கடத்தல்களும் அநேகமாக பலவந்தமாகப் பணம் பறிப்பதை நோக்கமாகக் கொண்டவை என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விடயங்களாகும்.
கொழும்பில் நிலைவரம் இவ்வாறானதாகக் காணப்படுமென்றால், மோதல்கள் மிகத் தீவிரமாக நடைபெறும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அதிகார துஷ்பிரயோகம் எவ்வளவு தூரத்திற்கு இடம்பெறும் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாததாகவுள்ளது.
உயர்நீதிமன்றம் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தல்களை வழங்குகின்ற போதிலும் அதிகாரிகள் அதனைப் புறக்கணிக்கின்றனர்.அதிகாரிகளின் புறக்கணிப்பை ஊக்குவிக்கும் அரச மனோபாவம் சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் மாத்திரமல்லாமல் அரசில் இடம்பெற்றுள்ளவர்களும் இவ்வாறான சட்ட விரோத நடத்தைகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் அரசின் மனோபாவம் அமைந்துள்ளது.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுடன் அமைச்சர் மேர்வின் சில்வா மோதலில் ஈடுபட்டார். அதன் பின்னர் பத்திரிகையாளர்கள் பலர் தாக்கப்பட்டமை தொடர்பாகவும், அரசு பொறுப்புணர்வுடன் கூடிய நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.
மாறாக, இவ்வாறான சட்டம் ஒழுங்கு குலையும் நிலைமையை ஏற்படுத்துவதே தற்போதைய ஆட்சியாளர்களின் தந்திரோபாயம் என்ற உணர்வு மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களை சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் புறக்கணித்தால் அரசில் உள்ளவர்கள் அதனை சகித்துக்கொண்டால் நீதிமன்றம் என்ன செய்ய முடியும்? இவ்வாறான சூழ்நிலைகளில் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தல்களை வழங்குவது போதுமானதாக அமையாது.
அதிகாரிகள் நீதிமன்றத்துடன் ஒத்துழைத்தால் மாத்திரமே சட்ட அமுலாக்கல் அமைப்புகள் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தலாம்.
சட்ட அமுலாக்கல் அமைப்புகள் மத்தியில் ஒழுக்கத்தைப் பேணுவதற்காக மீண்டும் மீண்டும் உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிப்பதே நீதிமன்றத்தின் உத்தரவுகளை இந்த அமைப்புகள் எவ்வளவு தூரம் அலட்சியம் செய்கின்றன என்பதற்குச் சான்று.
உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களை அலட்சியம் செய்வதே நீதிமுறைமையை மீறும் செயலாகும்.இதன் காரணமாக உயர்நீதிமன்றம் இது குறித்து ஆராய்ந்து, தனது உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக முழுமையான தந்திரோபாயமொன்றைக் கையாள வேண்டும்.
சட்ட அமுலாக்கல் அமைப்புகள் மத்தியில் சட்டம் ஒழுங்கின்மை பரவியுள்ள விதத்தைக் கருத்தில் கொள்ளும்போது இது இலகுவான விடயமல்ல.
எனினும் நீதிமன்றம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், தனது அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும் இவ்விடயத்தில் தலையிடுவது அவசியமானதாகும் என்று உள்ளது.