சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச பட்டயத்தை இலங்கையில் சட்டக் கட்டமைப்புக்குள் நடைமுறைப் படுத்துவதற்குள்ள அரசமைப்பு ரீதியான பின்புலங்கள் தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்மானம் நேற்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச பட்டயத்தின் அநேகமான பிரிவுகள் இலங்கையின், அரசமைப் பின் பல சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்கள் ஊடாக தற்போது நடைமுறையில் உள்ளன என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறியவந்தது.பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா மற்றும் நீதியரசர்களான நிமல் காமினி அமரதுங்க, சலீம் மர்சூக், அன்ரூ சோமவன்ஸ, ஜகத் பாலபட்டபெந்தி ஆகியோரைக் கொண்ட ஆயமே இத்தீர்மானத்திற்கு வந்தது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றுக்கு அனுப்பியிருந்த சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச பட்டயத்தை இலங்கைச் சட்டக்கட்டமைப்புக்குள் அமுல்படுத்துவதற்குரிய அரசமைப்பு ரீதியான பின்புலம் குறித்த கேள்வியே இதன்போது மீளாய்வுக்குட்படுத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் உரிமைகள் தொடர்பான சிவில் மற்றும் சர்வதேச பட்டயத்தை இலங்கை சட்டக் கட்டமைப்புக்குள் உள்ளடக்குவதற்குள்ள வாய்ப்பு குறித்து ஜனாதிபதி உயர்நீதிமன்றிடம் கருத்துக் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.