இலங்கையின் அழிப்பு போருக்கு இந்தியாவும் உறுதுணையாக இருப்பதாகவே தோன்றுகின்றது. தமிழகத்தின் பெருவாரியான தமிழ் மக்கள் எமது ஈழப்போரை ஆதரிக்கின்றனர். இந்த நிலையில் இந்தியா எமது அமைப்பின் மீதான தடையினை நீக்கி தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையினை அங்கீகரிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இக்கோரிக்கையினை அவர் விடுத்துள்ளார். பேட்டியின் விபரம் வருமாறு:
கேள்வி: சமாதான உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசு விலகிய பிறகு ஈழத் தமிழர்களின் நிலை எப்படியிருக்கிறது? பதில்: கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக போருக்குள் வாழும் ஒரு வாழ்க்கையைத்தான் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு கண்ணிவெடிகளையும், கண்ணீரையும்தான் இந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பரிசளித்து வருகிறது. சிங்கள அரசு தொடுக்கும் இந்த அவலங்கள்தான் தமிழ் மக்களை விடுதலையின் பாதையில் தொடர்ந்து போராடத் தூண்டுகிறது. சுதந்திரத்துக்கான விலையாகவே இந்த கொடுமைகளை தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நீண்டதொரு அமைதி வாழ்க்கைக்குப் பிறகு ஈழ மக்கள் மீது கொடூரமான ஒரு போரை திணித்திருக்கிறது இலங்கை அரசு.
மீண்டும் மீண்டும் அவர்கள் கறுப்பு வரலாற்றை கொண்டு வருகிறார்கள். தினம் தோறும் வான்படைகள் மூலம் தமிழ் மக்களை குண்டு வீசி கொல்கிறது சிங்கள அரசு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈவிரக்கம் இல்லாலாமல் கொல்லப்படுகிறார்கள். இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் வாழும் ஈழ மக்களின் நிலை இதை விட மோசமாக உள்ளது. தாயின் எதிரில் மகளை பாலியல் வன்முறை செய்வது, குழந்தைகளின் முன்னால் பெற்றோரைக் கொல்வது என்ற வழக்கமான தங்களின் சித்திரவதை வடிவத்தை இலங்கை இராணுவம் தமிழ் மக்கள் மீது தினம் தினம் செய்கிறது. இந்த செய்திகள் வெளியுலகுக்கு தெரியாவண்ணம் மூடிமறைத்து பொய்ச் செய்திகளையே பரப்புகிறார்கள். அது மட்டுமல்ல எந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களையும் இலங்கை அரசு ஈழத்துக்குள் அனுமதிப்பதில்லை. ஈழ மக்களின் துன்பம் உலகுக்கும் தெரிவதில்லை. தமிழ்நாட்டுத் தமிழனுக்கும் தெரிவதில்லை.
கேள்வி: சமாதான பேச்சுவார்த்தையிலிருந்து நோர்வே விலகிச் சென்றது புலிகளுக்கு பின்னடைவுதானே? பதில்: இலங்கை அரசுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான சர்வதேச ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளராகச் செயல்படுமாறு இரு தரப்பாலும் அழைக்கப்பட்ட ஒரு நாடுதான் நோர்வே. ஆனால், ஒரு தலைப்பட்சமாக சிங்கள அரசு உடன்பாட்டிலிருந்து விலகியதால் அனுசரணையாளரான நோர்வே அமைதி முயற்சியிலிருந்து விலகியிருக்க நிர்பந்திக்கப்பட்டது. எனவே, நோர்வேயின் வெளியேற்றமானது சமாதான வழியில் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும் என இந்த உலகத்தின் முன் நாடகம் ஆடிக்கொண்டிருந்த சிங்கள அரசிற்கு பின்னடைவே ஒழிய புலிகள் இயக்கத்துக்கு எந்தப் பின்னடைவும் இல்லை.
கேள்வி: ஈழத்தின் நான்கில் ஒரு பங்கு நிலத்தில் முழுமையாக விடுதலைப் புலிகளின் நீதி, நிர்வாக ஆட்சி நடைபெற்று வந்த சூழலில் இப்போது அந்த இடங்களை கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை இராணுவம் கைப்பற்றி வருவதாக செய்திகள் வருகிறதே?
பதில்: ஒரு போரில் தனது கட்டுப்பாட்டு நிலங்களை விட்டு பின்னகர்வதை தோல்வியாகவோ பின்னடைவாகவோ பார்க்கக்கூடாது. இது யுத்த தந்திரங்களுடன் கூடிய இராணுவ விவகாரம். எமது அமைப்பு விடுதலைப் போராட்டத்தின் நன்மை கருதி எங்கள் கட்டுப்பாட்டு நிலங்களில் இருந்து நாங்கள் பின்னகர்வதும் காலம் கனிந்து வரும் போது எதிரிகளிடம் இருந்து எமது தாய் மண்ணை மீட்பதையும் புலிகளின் போரியல் வரலாற்றை கவனித்தவர்களுக்கு புரியும். தமிழீழத்தின் தென்பகுதியில் இருந்து புலிகள் ஒரு பின்னகர்வைச் செய்தனர். இதைனையே புலிகளின் தோல்வியாக உலகிற்குக் காட்டி வெற்றிப் பிரகடனம் செய்கிறது சிங்கள அரசு. அதே வெற்றிக் கனவுடன் வன்னிக்குள் போரைத் துவங்கிய சிங்கள அரசு இப்போது திணறிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள உண்மையான கள நிலவரங்கள் வெளி உலகுக்குக் தெரிவதில்லை.வன்னிப் போரில் புலிகளுடன் தோற்றுப்போவோம் என்று அஞ்சித்தான் இந்தியாவிடம் இருந்து ஆயுதங்கள் பெற்று தமிழருக்கு எதிரான போரை தீவிரமாக்குகிறது இலங்கை அரசு.
எப்போதெல்லாம் ஈழ மக்கள் மீது கொடூரமான போர் திணிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்திய அரசு கொடுக்கிற ஆயுதங்களை வைத்துத்தான் அங்கு தமிழ் மக்களைக் கொல்கிறது சிங்கள அரசு. ஆனாலும், எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் போரியல் தந்திரங்களோடு களமாடும் புலிகள் ஈழ மக்களுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுப்பார்கள்.