வன்னிக் கள முன்னரங்கில் பணியாற்றும் இராணுவத்தினரில் பல நூற்றுக்கணக்கானோர் "சிக்குன்குனியா" நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் இது, படைத்தரப்புக்குப் பெரும் பாதிப்பு நிலையை ஆழ்த்தியிருக்கின்றது என்றும் விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.
தற்போதைய மழை வெள்ளத்தை ஒட்டி வன்னிக் காட்டுப் பகுதியில் நுளம்புப் பெருக்கம் வரையறையின்றி அதிகரித்திருக்கின்றது எனவும் இது படையினரின் திட்டமிட்ட பல நடவடிக்களைப் பெரும் பின்னடைவுக்குள் ஏற்படுத்தும் விதத்தில் "சிக்குன்குனியா' நோய்ப்பரவலை ஏற்படுத்தியிருக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிக்குன்குனியாவில் பாதிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான படையினர் கடந்த இரண்டரை வார காலத்தில் அநுராதபுரம், பதவியா, கெப்பிற்றிக்கொலாவை போன்ற பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இவ்வாறு சிகிச்சை பெற்ற படையினரின் எண்ணிக்கை பற்றிய புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட மருத்துமனைகளின் நிர்வாகங்கள் மேலிடத்தினால் பணிக்கப்பட்டிருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது.அடுத்து வரும் வாரங்களில் நிலைமை மேலும் மோசமாகலாம் என்று கருதி, மாற்று முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு உயர் வட்டாரங்கள் தீவிரமாகக் சிந்தித்து வருகின்றன என்றும் கூறப்படுகின்றது.இதற்கிடையில் அண்மைக்காலத்தில் அநுராதபுரம் பகுதியில் மட்டும் ஐந்துபேர் சிக்கின்குனியாவால் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.