கனடாவின் தலைநகர் ரொறன்ரோவில் சிங்களப் பேரினவாதி எனப் பெயரெடுத்த அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராகப் மாபெரும் கறுப்புக்கொடி போராட்டம் நேற்று நடத்தப்பட்டது.
Can Indo Lanka எனும் அமைப்பு தமிழினப் படுகொலையை அரங்கேற்றி வரும் சிறிலங்கா அரசாங்கத்தின் ஒட்டாவா தூதரகத்தின் ஆதரவோடு Double Tree International Hotel, Toronto இல் நேற்று வெள்ளிக்கிழமை (28.03.08) நடத்திய 2008 CSL Awards Gala இரவு விருந்தில் அர்ஜூன ரணதுங்க சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டபோதே, அவருக்கு எதிராக இப்போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் முன்னின்று நடத்திய இப்போராட்டத்தில் கறுப்புக் கொடிகளையும் முழக்க அட்டைகளையும் தாங்கிய சுமார் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் கடுங்குளிரிலும் (சுழியத்துக்குக் கீழே 15 பாகை) பலத்த காற்றிற்கும் மத்தியிலும் கலந்து கொண்டனர்.
சிங்கள இராணுவமே
தமிழீழத்தை விட்டு வெளியேறு
ரணதுங்க - உன் கைகள்
தமிழர்களின் குருதி படிந்த கைகள்
சிங்கள இராணுவமே
தமிழீழத்தை விட்டு வெளியேறு
தமிழர் வேண்டுவது நீதி
தமிழர் வேண்டுவது சுதந்திரம்
தமிழர் வேண்டுவது நீதியான சமாதானமே
இன்று கொசோவோ நாளை தமிழீழம்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
சிறிலங்கா - நீயும் வாழு தமிழரையும் வாழவிடு
தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்து
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலையை நிறுத்து
சிறிலங்கா போரை நிறுத்து
சமாதானத்துக்கு வாய்ப்புக் கொடு
தமிழினத்தின் தன்னாட்சியை அங்கீகரி
மகிந்த ராஜபக்சவை போர்க் குற்றங்களுக்கு நீதமன்றத்தில் நிறுத்து
ஆகிய முழக்க அட்டைகளை போராட்டத்தில் கலந்து கொண்டடோர் ஏந்தியவாறு வரிசையாக நடைபாதையில் சிறிது நேரம் சுற்றிச் சுற்றி நடந்தனர்.
இடையிடையே "Arjuna Ranatunga is a racist" என்ற முழக்கம் வானைப் பிளந்தது.
15-க்கும் அதிகமான காவல்துறையினர் ஹோட்டல் உட்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
500 பேர் கலந்து கொள்வதாக விளம்பரப்படுத்தப்பட்ட இரவு விருந்தில் 60 பேரே கலந்து கொண்டனர். அதில் மூன்று அல்லது நான்கு விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழர்களே கலந்து கொண்டனர்.
"தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் யாரும் பிரிக்க முடியாது. அப்படிப் பிரிக்க எத்தனிக்கும் சிங்களப் பௌத்த தீவிரவாதியான மகிந்த ராஜபக்ச சரி, மற்றவர்களும் சரி அதில் வெற்றி பெறமுடியாது. புலத்தில் உள்ள மக்கள் மட்டுமல்ல, புலம்பெயர்ந்த மக்களும் பிரபாகரன் பக்கம் என்ற செய்தியைத்தான் இக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் மூலம் வெளிப்படுத்தியுள்ளோம்" என்று தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் நக்கீரன் தெரிவித்துள்ளார்.
இக் கறுப்புக்கொடி போராட்டத்தை தமிழ்ச்சோலை வானொலி, கனடிய தமிழ் வானொலி, கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி, கீதவாணி ஆகியவை நேரடி ஒலிபரப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.