இரத்தினபுரி மாவட்டத்தில் பெரும்பாலான தோட்டப்புற தமிழ் மாணவர்கள் சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வி கற்பது தெரியவந்துள்ளது.
போக்குவரத்து வசதியின்மை, பொருளாதாரச் சிக்கல் மற்றும் தமிழ் பாடசாலைகளிலுள்ள வளப்பற்றாக்குறை காரணமாகவே இவர்கள் சிங்கள மொழிமூலப் பாடசாலைகளில் கல்வி கற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரத்தினபுரி நிவித்திகலை, பெல்மதுளை கலவான, குருவிட்ட பகுதி பாடசாலைகளிலேயே கூடுதலான தோட்டப்புற மாணவர்கள் சிங்கள மொழி மூல பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்றனர்.
பெல்மதுளை குட்டாபிட்டிய தோட்டத்திலும் போபிட்டிய தோட்டத்திலும் அமைக்கப்பட்ட தமிழ்ப் பாடசாலைகள் கடந்த காலங்களில் மூடப்பட்டதனால் அங்குள்ள மாணவர்கள் சிங்கள மொழி மூலப் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர்.
கலவான பகுதிகளில் அநேகமான தனியார் தோட்டங்களே காணப்படுகின்றன. இந்தத் தோட்டங்களில் தமிழர்கள் பெருந்தொகையில் கடமைபுரிகின்றபோதிலும் இங்கு தமிழ் பாடசாலை ஒன்றில்லை. அத்துடன் இவர்கள் நிரந்தரமாக இங்கு வசிப்பதில்லை. இதனால் இவர்களின் பிள்ளைகள் அவ்வப்போது இப்பகுதியிலுள்ள சிங்கள பாட சாலைகளில் கல்வி கற்கின்றனர்.
இரத்தினபுரி மாவளை தோட்டம் மீகிட்டிய பிரிவு தோட்ட மக்களின் பிள்ளைகளும் இப்பகுதியிலுள்ள சிங்கள மொழி மூலப் பாடசாலைகளுக்கே செல்கின்றனர்.