சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 18 ஆவது தேசிய சம்மேளனம் இன்று ஞாயிற்றுக்கிழமை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இம் மாநாட்டில் முக்கிய விடயங்கள் பல ஆராயப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படவிருப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.
குறிப்பாக இன நெருக்கடித் தீர்வுக்கான அனைத்துக் கட்சிக்குழுவின் 13 ஆவது அரசியல் திருத்தச் சட்ட பரிந்துரைகளை ஆராய்ந்து அதுகுறித்த முடிவுகளும் இம் மாநாட்டில் எடுக்கப்படவிருக்கின்றது.
அத்துடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்தும் இங்கு ஆராயப்படவிருப்பதுடன் வடக்கு-கிழக்கில் இடம்பெற்று வரும் படை நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைச் செலவு குறித்தும் இம் மாநாட்டில் ஆராயப்படும் என்று தெரியவருகிறது.
இம் மாநாட்டிற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.