ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் மீறப்படும் போது அதனைத் தடுக்குமாறு சர்வதேச சமூகத்திடம் தெரியப்படுத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஸவை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்படுவதாக மேலக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மெக்ஸ் தொலைக்காட்சிச் சேவையின் நான்காம் மாடி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட போதே மனோ கணேசன் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
1988-1990 களில் தெற்கில் சிங்கள இளைஞர்கள் ஆயிரக் கணக்ககில் படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஜெனீவா சென்று அப்போதைய அரசாங்கம் மிக மோசமான வகையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
மேலும் இன்று மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அரசாங்கத்தினால் விமர்சிக்கப்படும் சர்வதேச மன்னிப்புச் சபை ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் போன்ற அமைப்புக்களை ஸ்ரீலங்காவுக்கு அழைத்து ஸ்ரீலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றி ஆராய்வதற்கு மஹிந்த ராஜபக்ஸ வழிவகை செய்து கொடுத்தார்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜே வி பி யினரும் குறித்த அமைப்புக்களிடமே முறைப்பாடு செய்திருந்ததாக மனோ கணேசன் தெரிவித்தார்.
இந்தநிலையில் தமிழ் மக்களின் மனித உரிமைகள் மீறப்படும் போது அது குறித்து சர்வதேச சமூகத்திடம் முறைப்பாடு செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஸவின் செயற்பாடுகளே தமக்கு முன்னுதாரணமாக அமைந்தது என மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்..
ஸ்ரீலங்காவுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் வெளிநாடுகளில் தகவல்களைத் தெரிவிப்பது தேசத் துரோகச் செயல். இந்தநிலையில் ஏன் இவ்வாறான செயற்பாடுகளில் நீங்கள் ஈடுபடுகின்றீர்கள் என ஊடகவியலாளர் வினவிய போது இந்த விடயங்களைத் தெரிவிப்பதன் மூலம் ஸ்ரீலங்காவுக்கு அபகீர்த்தி ஏற்படவில்லை. ஸ்ரீலங்காவில் இடம்பெறும் சம்பவங்களின் காரணமாகவே அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்தார்.
ஜே வி பி யுடன் தொடர்புடையவர்களின் உரிமைகள் பற்றிக் குரல் கொடுத்த போது மஹிந்த ராஜபக்ஸ ஒரு ஜே.வி.பி. உறுப்பினர் என அன்று எவரும் முத்திரை குத்தவில்லை. எனினும் தமிழ் மக்களுக்காகத் தாம் குரல்கொடுக்கும் போது தம்மை விடுதலைப் புலி முத்திரை குத்துவது நியாயமான செயலா? என மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.
சிங்கள இளைஞர்கள் கடத்தப்பட்ட போது ஐக்கிய நாடுகள் சபையில் முறைப்பாடு செய்த மஹிந்த ராஜபக்ஸவை எவரும் தேசத்துரோகி எனக் குறிப்பிடப்படவில்லை.
எனினும் தமிழ் இளைஞர்கள் கடத்தப்படும் போது அதனைத் தெரிவித்த என்னைத் தேசத்துரோகி என்று குறிப்பிடுவது நான் தமிழன் என்பதாலா? என்றும் அவர் வினவினார்.
13 ஆவது திருத்தம் ஒருபோதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது. அதனைத் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர் எனவும் மனோ கணேசன் இதன் போது தெரிவித்தார்.
ஸ்ரீலங்காவின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வாகத் தாம் சமஷ்டி முறையொன்றை விதந்துரைப்பதாக அவர் குறிப்பிட்டார். குறைந்தபட்சம் இந்தியாவின் பிராந்திய ஆட்சிமுறையை ஒத்த ஒரு அதிகாரப் பரவலாக்கலேனும் தீர்வுத் திட்டமாக முன்வைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
எனினும் இதன் மூலம் தமிழ் மொழி பேசாத மக்கள் குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று அர்த்தப்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.