கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பொருட்டு பதுங்குகுழியொன்றை அமைக்கும் நோக்கில் மட்டக்களப்பு கல்லடி கரையோரப் பிரதேசத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த காவல்துறை விசேட அதிரடிப்படை வீரர்களுக்குப் பிள்ளையான் குழுவினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
அத்துடன் குறிப்பிட்ட காவல்துறை விசேட அதிரடிப்படை வீரர்களைக் குறித்த பிரதேசத்திலிருந்து பிள்ளையான் குழு விரட்டியடித்ததாகத் திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 25ம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இந்தச் சம்பவம் தொடர்பாக தமது உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக காவல்துறை விசேட அதிரடிப்படை வீரர்கள் அறிவித்ததாகவும் தெரியவருகிறது.
எனினும் பிள்ளையான் குழுவினருடன் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாது அந்த இடத்தைவிட்டு உடனடியாக அகலுமாறு உயர் காவல்துறை அதிகாரிகள் குறித்த அதிரடிப்படை வீரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
பதுங்கு குழியொன்றை அமைக்கும் நோக்கில் கடல் மணலை யூரியா உறைகளுக்குள் நிரப்பிக் கொண்டிருந்த போது பிள்ளையான் குழுவினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
கடல் மணல் அகழப்படுவதால் கரையோரப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் எனக் கூறி காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு பிள்ளையான் குழு அச்சுறுத்தல் விடுத்ததாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.