விக்ரமபாகு கருணாரத்னவின் தலைமையிலான இடதுசாரி முன்னணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலக மக்கள் முன்னணி மற்றும் சோசலிச கட்சிகள் இணைந்து கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 3ம் திகதி ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடாத்த உள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ம் திகதி ரத்மலானையில் இந்த பேரணி நடைபெறவுள்ளது.தேர்தலில் போட்டியிடாத அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதாக விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டமை தொடர்பாகவும் தொடர் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கு பிரிக்கப்படுவதற்குப் பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் பிள்ளையான் குழுவினரிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யுத்தத்தை நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு அழுத்தங்கொடுக்கும் நோக்கில் உலகம் முழுவதிலும் உள்ள 50 சோசலிச கட்சிப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த சோசலிசக் கட்சியின் பிரதிநிதி சனில் ஜயன்ஹெதி விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.