ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமான தொடர்புகளை பேணி வரும் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச தனது தலைமையில் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அரசாங்கத்தில் இணைப்பதற்குக் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கிழக்கில் செயற்படும் துணை ஆயுதக் குழுவான பிள்ளையான் குழுவின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க அனுர குமார திஸநாயக்க லால் காந்த போன்றவர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில் பிள்ளையான் குழுவிடம் இருந்து ஆயுதங்களைக் களையக் கூடாது என விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
விமல் வீரவன்சவின் இந்த அறிவிப்பு கட்சியின் முக்கியஸ்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது.
இது குறித்து ரத்தொடவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் லால் காந்த கட்சியின் மத்திய குழுவினால் எடுக்கப்படும் தீர்மானங்களைப் பின்னபற்றத் தவறும் ஒருவரை தொடாந்தும் மத்திய குழுவில் வைத்திருப்பது அர்த்தமற்றது என்று கூறியுள்ளார்.
லால் காந்தவின் இந்தக் கருத்தானது ஜே.வி.பியின் உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளமையை வெளிக்காட்டியுள்ளது.