சிறிலங்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் படைத்துறைப் பிரிவு அதிகாரியான கப்டன் பிரதீப் சிங், யாழ். குடாநாட்டிற்கு மூன்று நாள் பயணம் செய்து அங்குள்ள படையினரின் முன்னரங்க நிலைகளைப் பார்வையிட்டதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்புப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
வன்னியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மோதல்கள் தணிந்துள்ளன. கடந்த இரு வாரங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்வான நிலப்பகுதிகள் வெள்ளத்தால் நிறைந்துள்ளதனால் எல்லோரும் உயர்வான நிலப்பகுதியை நோக்கி நகரவேண்டிய நிலை தோன்றியுள்ளது.
அரச படையினரும், விடுதலைப் புலிகளும் பாதகமான காலநிலைக்கு ஒத்துழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பதுங்குகுழிகள் வெள்ளத்தால் நிறைந்துள்ளன. காப்பரண்களும் மழையின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளன. பொறிவெடிகள் மழை நீரினால் கழுவப்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
கனரக கவச வாகனங்கள் மற்றும் டாங்கிகள் சதுப்பு நிலங்களில் செயற்திறன் அற்றதாக மாறியுள்ளன. படையினர் தற்போது உழவூர்திகளையே பயன்படுத்தி வருகின்றனர்.
எனினும் இதில் மிகவும் மோசமானது என்னவெனில் இரு தரப்பும் புதைத்து வைத்த மிதிவெடிகளும், பொறிவெடிகளும் மழை வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டு இடம் மாறியுள்ளதாகும்.
பொதுவாக மிதிவெடிகள் மற்றும் பொறிவெடிகள் புதைக்கப்படும் போது அவை தொடர்பான வரைபடங்கள் பேணப்படுவதுண்டு. இது பின்னர் அவற்றை அகற்றுவதற்கு பயன்படும். தற்போது இந்த வரைபடம் குழம்பிப்போயுள்ளது.
இதனிடையே பருவமழை காலத்தில் விடுதலைப் புலிகள் பெரும் எடுப்பிலான வலிந்த தாக்குதல்களை நடத்துவதுண்டு. அடைமழை, படையினரின் கனரக வாகனங்களின் பயன்பாடுகளையும், பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களையும் மட்டுப்படுத்தலாம்.
எனினும் கடந்த வாரம் ஓரளவு மழை தணிந்துள்ள நிலையில் படையினர் தமது நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.
பறையனாலங்குளம் குதியில் நடைபெற்ற படை நடவடிக்கையில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக படை தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும் படையினரின் தகவல்களை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
கொழும்பில் அரச தலைவர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை கூட்டப்பட்ட சிறப்பு பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் யாழ். குடாநாட்டு மற்றும் வன்னிப் பகுதி இராணுவத் தளபதிகள் உட்பட முப்படைத் தளபதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தற்போதைய படை நடவடிக்கைகள் தொடர்பாக மகிந்தவிற்கு விளக்கமளித்துள்ளனர்.
இந்த விளக்கத்தின் போது வரைபடங்களும் காண்பிக்கப்பட்டதுடன், தற்போதைய வெற்றிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகளும் ஆராயப்பட்டன. படையினருக்கு இடையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மற்றும் வான் தாக்குதல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. மேலும் பல விடயங்கள் ஆராயப்பட்ட போதும் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு அது தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முப்படைத் தளபதிகள், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ, 57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவீந்திர சில்வா, 59 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நந்தன உடுவத்த மற்றும் கடற்படையின் பிராந்திய கட்டளை தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த புதன்கிழமை மன்னாரில் உள்ள விடுதலைப் புலிகளின் இரு முன்னணி அரண்கள் மீது கடந்த புதன்கிழமை மீது இரு எம்.ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் மூலம் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாலம்பிட்டியை கைப்பற்றி விடுதலைப் புலிகளின் விநியோக வழிகளை தடைசெய்து, மடுவை சுற்றிவழைத்து கைப்பற்றுவதே படையினரின் உத்தியாகும்.
எனினும் கடந்த இரு வாரங்கள் (மார்ச் 7 ஆம் நாளில் இருந்து 24 ஆம் நாள் வரையிலும்) நடைபெற்ற சமாரில் 55 படையினர் கொல்லப்பட்டதுடன், 223 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயா நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியான கப்டன் பிரதீப் சிங் யாழ். குடாநாட்டிற்கு மூன்று நாள் பயணம் செய்துள்ளார். இதன் போது அவர் பாதுகாப்புப் படையினரின் முன்னரங்க நிலைகளுக்கும் சென்றதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.