ஸ்ரீலங்காவின் சுமார் 7500 உற்பத்தி பொருட்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரிவிலக்கை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கிக்கொள்ளவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்த அமைச்சர் ஜீ.எல்.பீரிசிடம் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்காவின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கில் செயல்பட்டுவரும் கூட்டணியின் தூண்டுதலினாலேயே ஐரோப்பிய ஒன்றியம் வரிவிலக்கினை நீக்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீலங்காவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சில தரப்புகள் செயற்படுகின்றன. இதில் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஏனைய தரப்புகள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் தொடர்பாக எந்த ஒரு செயற்பாடும் இல்லை என்னும் கருத்து இந்தத் தரப்புகளால் சர்வதேச ரீதியில் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவின் மனித உரிமை விடயம் எதிர்வரும் காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய உதவியின் போது கவனத்தில் கொள்ளப்படும் என அண்மையில் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியக் குழு எச்சரித்திருந்தது.
இந்தநிலையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஸ்ரீலங்காவின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என அமைச்சர் ஜி எல் பீரிஸ் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்காவுக்கு எதிராக செயற்படுவதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இருக்கிறாரா? எனக் கேட்டபோது பிரசல்ஸ்ஸில் சந்திரிகா குமாரதுங்க. ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் பெனிடா பெரோ வேட்னருடன் பகல் போசனத்தில் பங்கேற்றதாக அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.