தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் கரும்புலிகளால் கடந்த வாரம் மூழ்கடிக்கப்பட்ட டோறாப் படகு, நீர்மூழ்கிக் கப்பல் அல்லது அலையுடன் பயணிக்கும் கலம் மூலம் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று கடற்படையின் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
நாயாறு கடற்பகுதியில் கடந்த வாரம் மூழ்கடிக்கப்பட்ட டோறா பீரங்கிப் படகு தொடர்பான பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. கடந்த 22 ஆம் நாள் நடைபெற்ற இத்தாக்குதலில் டோறா பீரங்கிப் படகு திடீரென வெடித்துச் சிதறி குறுகிய நேரத்தில் மூழ்கிப்போயுள்ளது.
இத்தாக்குதலில் காணாமல் போன 10 கடற்படையினரில் மூன்று பேரின் சடலங்கள் இந்த வாரத்தின் முற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எனினும் 7 கடற்படையினர் தொடர்பாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவர்களில் சிலர் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று கடற்படைத் தலைமையகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
பெண் ஒருவரின் உடற்பகுதிகளை கடந்த வியாழக்கிழமை கடற்படையினர் பருத்திதுறையை அண்டிய கடற்பகுதியில் கண்டெடுத்துள்ளனர். இச்சடலம் டோறா மீது தாக்குதல் நடத்திய கரும்புலிகளில் ஒருவரினதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை கடற்படையினர் வெளியிட்டுள்ளனர்.
பி-437 இலக்கமுடைய டோறாப் படகு கடல் கண்ணிவெடியில் சிக்கியதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட போதும் அது மனித டோப்பிடோ ரக வெடிகுண்டுத் தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் தற்போது வலுத்துள்ளன.
எனினும் மூன்று கரும்புலிகளால் இயக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் அல்லது அலையுடன் பயணிக்கும் கலம் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் கடற்படையின் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் இச்சம்பவத்தின் போது 45 நிமிடங்கள் கடற்சமர் நடைபெற்றதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. ஆனால் இதன் மூலம் தமது புதிய உத்திகளை மறைப்பதற்கு விடுதலைப் புலிகள் முயற்சித்துள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூழ்கடிக்கப்பட்ட டோறாவிலும் மற்றைய டோறாப் படகிலும் இருந்த கடற்படையினர் அங்கு கடற்சமர் நடைபெறவில்லை எனவும், அது தொடர்பான இலத்திரனியல் தகவல்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
இத்தாக்குதல் நடைபெற்ற 24 மணிநேரத்தில் கடற்புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் திரியாய்க்கு வடக்குப் புறமுள்ள கடற்பகுதியில் கடற்சமர் நடைபெற்றுள்ளது.
வடகிழக்கு கடற்பகுதிகளில் தற்போது மோதல்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளங்கள் விழிப்பு நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே மீண்டும் கிழக்கு மாகாணத்தில் படையினரின் பலத்தை அதிகாரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், அங்கு அண்மையில் நடைபெற்ற தாக்குதலும் பெரும் நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது.
கொக்கட்டிச்சோலைக்கு அண்மையில் கடந்த வாரம் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் இரு காவல்துறையினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட மூத்த காவல்துறை அதிகாரி மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அப்பகுதியில் நடைபெற்று வரும் தமது திட்டங்கள் தொடர்பாக பார்வையிடச் சென்ற ஜப்பானிய பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய காவல்துறையினரே தாக்குதலில் சிக்கியுள்ளனர்.
மேலும் இஸ்ரேலுக்குச் சென்றுள்ள பிரதமர் ரட்ணசிறீ விக்கரமநாயக்க மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் அங்குள்ள படைத்துறை ஆயுத உற்பத்தி நிறுவனத்திற்கும் சென்றுள்ளனர்.
இஸ்ரேல் ஏயரோஸ்பேஸ் இன்டஸ்றீஸ் எனப்படும் இந்த நிறுவனம் டோறா அதிவேக தாக்குதல் படகுகள் மற்றும் ஆளில்லாத உளவு வானூர்திகளைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.