வடக்கின் போர்முனைகளில் இராணுவத்தினரின் தாக்குதல்களை படை நடவடிக்கைகளை முன்நகர்த்துவதற்கு அப்பகுதிகளில் தொடரும் மழை மற்றும் வெள்ளம் குந்தகமாக உள்ளன.
இவ்வாறு வடக்கு மற்றும் வன்னி களமுனைத் தளபதிகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் எடுத்து உரைத்துள்ளனர். விளக்கியுள்ளனர்.
வடக்கின் போர்முனைகளில் குறிப்பாக வன்னிப் போர்முனைகளில் இராணுவ நடவடிக்கைகள் மந்தகதி அடைந்திருப்பது குறித்து ஜனாதிபதி வினாவினார் என்றும், அப்போதே மேற்கண்டவாறு ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தெளிவுபடுத்தப்பட்டதாகவும் அறியவந்துள்ளது.
இயன்றவரை வடமுனைத் தாக்குதல்களைத் தொய்வின்றி மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி களமுனைத் தளபதிகளிடம் கூறினார் என்றும் சொல்லப்பட்டது.
நேற்றுமுன்தினம் ஜனாதிபதி தலைமையில் விசேட பாதுகாப்புச் சபை மாநாடு நடைபெற்றது. அதற்கு வடக்கு, வன்னிப் பகுதிகளிலிருந்தும் களமுனைத் தளபதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். மற்றும் முப்படைகளின் தளபதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
சுமார் ஐந்து மணிநேரம் நடைபெற்ற இந்த உயர் இராணுவ மாநாட்டில் வவுனியா, மன்னார், மணலாறு, முகமாலைப் பகுதிகளில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப் பட்டதாக அறியவந்தது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முப்படைத் தளபதிகள், யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், 58ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நந்தன உடுவத்த மற்றும் கடற்படையின் பிராந்தியக் கட்டளைத் தளபதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பொதுவாக பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு பிராந்தியக் கட்டளை அதிகாரிகள் அழைக்கப்படுவதில்லை.
எனினும், அவசரமான நேரங்களில் அவர்கள் அழைக்கப்படுவதுண்டு. 2000 ஆம் ஆண்டு யாழ். குடாநாட்டில் உள்ள படையினர் பெரும் நெருக்கடியைச் சந்தித்தவேளை, அன்றைய யாழ். குடாநாட்டு கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது எனப் படைத்துறை அதிகாரிகள் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளனர்