ஏ9 வீதியைத் திறந்து, என்னைக் கொலை செய்வதை அனுமதிக்கச் சொல்கின்றீர்களா? இவ்வாறு காட்டமாகக் கேள்வி எழுப்பியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
ஏ9 வீதியை மக்கள் போக்குவரத்துக்கு திறந்துவிட அரசு முயற்சிக்க வேண்டும் என்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு சீற்றம் கொண்டார் என்று அறியவருகிறது.
சிவில் சமூக அமைப்புக்களைச் சேர்ந்த பிரமுகர்களான ஜிப்ரி குணதிலக, ஜெகான் பெரேரா, கிங்ஸ்ஸி றொட்ரிக்கோ உட்படப் பலரை ஜனாதிபதி கடந்த வாரம் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அப்போது நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் நிர்ணயிக்கப்படதன் பிரகாரம் 2010ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும். அதற்கு முன்பாக வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்று ஜனாதிபதி பிரமுகர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்தார் என அறியவந்தது.
அரசமைப்பு விவகார சபையைக் கூட்டும் எண்ணம் தமக்கு இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, தேர்தல்கள் தெரிவுக்குழுவைக் கூட்டி அதன் வழிகாட்டல்களின் பிரகாரம் தேர்தல்கள் நடத்தப்படும் எனக் கூறினார்.
வடக்குக்கான பிரதான போக்குவரத்துப் பாதையான ஏ9 வீதியை அரசு திறக்க முயற்சிக்குமாறு சிவில் பிரதிநிதிகள் கேட்டபோது, என்னைக் கொல்ல அனுமதிக்கச் சொல்கின்றீர்களா? என்று அவர் கேட்டார் என்று நம்பிக்கையாகத் தெரியவந்துள்ளது.