ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லாவிடின் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், சுதந்திர ஊடக அமைப்பு, ஊடகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் ஆகியன அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஐந்து ஊடக அமைப்புக்கள் இணைந்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தமிழ் ஊடகவியலாளரான ஜே. எஸ். திஸ்ஸநாயகமும், அவரால் நடத்தப்பட்ட அவுட்ரிச் எஸ். எல். (
www.outreachesl.com) இணையதள அலுவலகம் மற்றும் (E Kuwality) அச்சகம் இயங்கிய கட்டிடத்தின் உரிமையாளர் வி. ஜெசீதரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து எமது அமைப்புகள் கவலையடைந்துள்ளன.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் திஸ்ஸநாயகம் தடுத்து வைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாகின்றன. அவர் கொழும்பு சைத்ய வீதியிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த இடம் தொடர்பாக 2007 அக்டோபரில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மென்பிரெட் நொவத் தமது அறிக்கையில் மனிதாபிமானமற்ற இடமெனத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டதிலிருந்து இதுவரை ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திடம் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்படவில்லை. அத்துடன் அவரை தடுத்து வைக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்ததா, இல்லையா என்பது கூட தெரிவிக்கப்படவில்லை. அவருடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட மூவர் 13 தினங்களுக்கு பின்னர் எதுவித குற்றச்சாட்டுகளுமின்றி விடுவிக்கப்பட்டனர்.
திஸ்ஸநாயகமும் ஏனையோரும் இவ்வாறு நீண்ட நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் மூலம் இலங்கையில் தமிழ் ஊடக செயற்பாட்டாளர்கள் முகம் கொடுக்கும் இழி நிலையை எடுத்துக் காட்டுகிறது. 2006 இல் சிவில் மோதல்கள் தீவிரமடைந்ததிலிருந்து இதுவரை காலமும் நாட்டின் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஊடகவியலாளர்களின் குரல் வெகுவாக நசுக்கப்பட்டுள்ளது.
ஊடக செயற்பாட்டாளர்கள் வெகுவாக காணப்பட்ட மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் இப்போது தமிழ் ஊடகவியலாளர்கள் இல்லை. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இயங்கிய ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல் அநேக ஊடகவியலாளர்கள் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் மற்றும் ஏனையோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளது இதுவரை வடக்கு கிழக்கின் நிலை நாட்டின் பிரதான நகரில் வசிக்கும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் முன்னுதாரணமென சந்தேகிக்கத் தோன்றுகிறது.
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் மற்றும் அவரது சகாக்கள் கைது செய்யப்பட்ட போது பின்பற்றப்பட்ட நடைமுறை மற்றும் சுதந்திர ஊடக இயக்கப் பேச்சாளர் சிவகுமார் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட விதத்தைப் போன்றதாகும். இவ்வாறு கைது செய்யப்படுவது அந்த நபருக்கு மட்டுமல்ல அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதென்பதை உணர்த்துவதாகவுள்ளது. இந்த உணர்வு கொழும்பு நகருக்கு அப்பால் கடமையாற்றும் ஊடக சமூகத்தினருக்கும் இப்போது ஏற்பட்டுள்ளது. திஸ்ஸநாயகத்தால் நடத்தப்பட்ட அவுட்ரிச் எஸ். எல். இணையதள அலுவலகத்தை மூடியது இலங்கை தொடர்பாக சுயாதீன தகவல்களை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் தடுத்துள்ளதாகவே நாம் கருதுகின்றோம்.
இதுபோன்ற சூழ்நிலையை உருவாக்குவது மற்றும் அவசர காலச் சட்டத்தை பரந்தளவு அமுல்படுத்துவதன் பலனாக இன்று இந் நபர்களுக்கு தமது அலுவலக நடவடிக்கைகள், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில்களைச் செய்வதற்கு இடமொன்றை வாடகைக்குப் பெற்றுக் கொள்ளக் கூட முடியாதுள்ளது. இவையனைத்தும் இந்த அரசின் முக்கிய புள்ளிகள் ஊடக சுதந்திரத்துக்காக அர்ப்பணிப்பதாக தொடர்ந்து உறுதியளிக்கும் போதே நடைபெறுகின்றன. எமது கூட்டமைப்பு ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் மற்றும் ஜெசீதரன் தம்பதியினர் தொடர்பாக குற்றச்சாட்டு இருந்தால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும், இல்லாவிட்டால் அவர்களை உடனடியாக விடுவிக்கும்படியும் அரசைக் கேட்டுக் கொள்கின்றது. இதேவேளை நாம் இலங்கை அரசை மேலும் கோருவதென்னவென்றால் ஊடகவியலாளர்களின் ஊடகத் துறையிலிருப்பவர்களின் மற்றும் அவர்களது குடும்பத்தினரது பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கும் படியும், ஊடக சுதந்திரத்தை நசுக்குவதற்காக இலங்கையில் முறையான கட்டத்துக்குள் இயங்கும் ஊடகங்களை குரலிழக்கச் செய்ய "தேசிய பாதுகாப்பு' மற்றும் அதற்கான தாக்கத்தையும் முன்வைக்க வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்.