மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நாட்டை இராணுவ ஆட்சிக்கு இட்டுச்செல்லும் அபாயம் தோன்றியுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா
குமாரதுங்க கொழும்பில் இருந்து வெளிவரும் வார இறுதி சிங்கள ஏடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கின்றார்.
அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
இந்த அரசாங்கத்தை நான் தான் அமைத்தேன். இந்த அரசாங்கம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. நான் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மீது அளவற்ற பற்று வைத்துள்ளேன். அதனால் கட்சி குறித்து விமர்சிக்க விரும்பவில்லை.
எனினும் நாட்டிற்கு ஆபத்தான நிலை ஏற்பட்டிருப்பதாக உணர்கிறேன். அரசாங்கத்தை இராணுவ மயப்படுத்தப் போவதாக தெரிகிறது. எனது தந்தையும், தாயாரும் இந்த நாட்டின் ஜனநாயகத்தை கட்டிக்காக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.
நான், ஒருபோதும் இராணுவ அரசாங்கத்தை அமைக்க இடமளிக்க மாட்டேன். எனக்கு, மீண்டும் அரசியலுக்கு வர விருப்பம் இல்லை. எனது சகோதரி சுனேத்ராவும் அரசியலுக்கு வர மாட்டார்.
அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கிளைகளில் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தத் தொகுதியின் பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்ய உள்ளேன்.
எனது ஆட்சிக் காலத்தில் மூன்று தவறுகளை செய்துள்ளேன். மக்கள் விடுதலை முன்னணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டமை முதலாவது தவறாகும். 2004 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை கலைத்தமை இரண்டாவது தவறாகும். நான் இழைத்த மூன்றாவது தவறை எதிர்காலத்தில் கூறுவேன்.
அதல பாதாளத்தில் விழுந்துள்ள இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமானால் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும். நான் இன்னமும் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கிறேன்.
தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை நானே தேசிய தலைவனாக்கினேன் என்றார் அவர்.