போரை நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உதவி வழங்கும் நாடுகள் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின் போது பிரித்தானிய நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினருக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1:00 மணி தொடக்கம் பிற்பகல் 3:00 மணி வரை நடைபெற்ற சந்திப்பிலேயே பிரித்தானிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருப்பதாவது:
இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் போர் மற்றும் மனித உரிமை மீறல்கள், தமிழ் மக்கள் முகம் கொடுத்து வரும் நெருக்கடிகள் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினருடன் கலந்துரையாடினோம்.
தமிழ் மக்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக எடுத்து விளக்கினோம். குறிப்பாக அனைத்து கட்சிக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினோம்.
13 ஆவது அரசியல் திருத்தம் இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் அல்ல என்பதனையும் அது 20 வருடங்கள் பழமையானது என்பதனையும் அவர்களுக்கு விளக்கினோம். அத்துடன் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இனப்பிரச்சினையை தீர்த்து வைக்கும் நோக்குடன் செயற்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.
அது மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சிவநேசன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட விதம் குறித்தும் அந்தப் படுகொலையின் பின்னணி குறித்தும் எடுத்துக்கூறினோம்.
விடுதலைப் புலிகளுடன் அரசு செய்துகொண்ட அண்மைக்கால உடன்படிக்கைகள் அனைத்தும் எப்படி கைவிடப்பட்டன என்பது குறித்தும் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு குறித்தும் விளக்கினோம்.
குறிப்பாக அபிவிருத்திப் பணிகளில் தமிழ் மக்கள் எப்படிப் புறக்கணிக்கப்பட்டனர் என்று அவர்களுக்கு விளங்கப்படுத்தியிருக்கிறோம்.
யாழ். குடாநாட்டு நிலைமை பற்றியும் அங்குள்ள மக்கள் அடையாளம் தெரியாதோரால் கடத்தப்படுவதும், சுட்டுக்கொலை செய்யப்படுவதும் குறித்து எமது கவலையைத் தெரிவித்தோம்.
எமது தகவல்களை கேட்டறிந்து கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினர், போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சிறிலங்கா அரசாங்கத்திற்கு தாங்கள் இது தொடர்பான அழுத்தங்களைப் பிரயோகிப்பதாக எம்மிடம் வாக்குறுதி அளித்துள்ளனர். அத்துடன் இத்தகைய அழுத்தங்களை சிறிலங்காவிற்கு உதவி வழங்கும் நாடுகள் வழங்க வேண்டும் என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டு, அத்தகைய அழுத்தங்களை தாங்கள் உதவி வழங்கும் ஏனைய நாடுகளுக்கும் தெரிவிப்பதாகவும் உறுதியளித்தனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தனும், செயலாளர் மாவை சேனாதிராஜாவும், கனகசபை ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவின் சார்பில் அன்ரூ ஜோர்ஜ், அன்ரூ லேல், ஸ்டீபன் ஹேமுட், அசோக்குமார் ஆகிய நால்வர் கலந்துகொண்டனர்.
இதேவேளை பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினர் இன்று ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தலைமையிலான குழுவினரையும் சந்தித்து பேச்சு நடத்தினர்.
இந்தப் பேச்சுக்களில் சிறிலங்காவின் உள்விவகாரங்களில் அனைத்துலக சமூகம் தலையிடுவது குறித்த தமது அதிருப்தியை ஜே.வி.பி. தலைவர் வெளிப்படுத்தினார் என்று ஜே.வி.பி வட்டாரங்கள் தெரிவித்தன.