மணலாறில் தாக்குதலை நடத்திவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய வான்தளத்துக்கு வானூர்திகள் திரும்பிய பின்னர் அவை மேலும் சிறிய அளவாக்கப்பட்டு உழவூர்திகளில் ஏற்றிச் செல்லப்பட்டதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது.
"த பொட்டம்லைன்" செய்தி ஆய்வுக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
சிறிலங்காப் படை நிலைகள் மீது விடுதலைப் புலிகள் 5 ஆவது வான் தாக்குதலை நடத்தியிருந்தனர். புலிகளின் வானூர்திகளை சிறிலங்கா வான்படையினால் இடைமறிக்க முடியவில்லை.
கடந்த ஏப்ரல் 25 ஆம் நாள் விடுதலைப் புலிகளின் Zlin Z-143L ரக இரண்டு இலகு ரக வானூர்திகள் முல்லைத்தீவிலிருந்து அதிகாலை 1:25 மணிக்கு முழு இருட்டில் தாழப் பறந்து புறப்பட்டன.
அதே நேரத்தில் விடுதலைப் புலிகளின் இலகு உலங்குவானூர்தியும் சிறிலங்கா வான்படையினரை திசை திருப்புவதற்காக இரணைமடு அருகே இருந்து புறப்பட்டது.
மணலாறு முன்னரங்க நிலைகளை அதிகாலை 1:32 மணியளவில் இரண்டு வானூர்திகளும் சென்றடைந்தன.
முன்னரங்க நிலைகள் மீது இரு குண்டுகளையும் சிங்கபுரப் பகுதியில் ஒரு குண்டையும் வீசிய அந்த வானூர்திகள் அதிகாலை 1:50 மணிக்கு தங்களின் தளத்துக்குத் திரும்பின.
முல்லைத்தீவு முள்ளியவளையில் புதிதாக கட்டமைக்கப்பட்ட ஓடுபாதைக்கு திரும்பிய போது சில விளக்குகளை தரையிலிருந்த விடுதலைப் புலிகள் எரியவிட்டனர்.
இரு வானூர்திகளும் தரையிறங்கிய பின்னர் விளக்குகள் அணைக்கப்பட்டு வானூர்திகளும் சிறகுகளும் மடக்கப்பட்டு இரண்டு உழவூர்தியில் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டன.
சிறிலங்காப் படைத்தரப்பின் ஆர்ட்டிலறி நிலைகளே புலிகளின் பிரதான இலக்காக இருந்தது. ஆனால் அதனை எட்ட முடியவில்லை. புலிகளின் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார்.
இரணைமடு ஓடுபாதையின் மீது சிறிலங்கா வான்படையினர் தொடர்ந்தும் குண்டுத் தாக்குதலை நடத்தினர். ஆனால்
விடுதலைப் புலிகளோ முல்லைத்தீவு நகரிலிருந்து 7கிலோ மீற்றர் மேற்காக முள்ளியவளையில் புதிய ஓடுதளத்தைக் கட்டமைத்துள்ளனர். அதனை சிறிலங்கா வான்படை அறிந்திருக்கவில்லை.
சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்ட சங்கரிடம் அவுஸ்திரேலியாவில் சிறப்புப் பயிற்சி பெற்றவர் விடுதலைப் புலிகளின் வான் பொறியாளர் ராஜூ.
விடுதலைப் புலிகளின் வான்படையின் நிறுவனர் சங்கர்.
புலிகளின் வானூர்திகள் செக் தயாரிப்பு Zlin Z-143L வானூர்தியாகும்.
இது 4 பேருடன் 1,000 கிலோ மீற்றர் வரை பறப்பில் ஈடுபடக்கூடியது. அதனை இருவர் மட்டும் பயணிக்கக்கூடியதாக புலிகள் மாற்றியமைத்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.