ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திடம் நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை. எனவே, புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டிய காலம் தற்போது வந்து விட்டது. புதிய அரசாங்கத்தை உருவாக்க மக்கள் முன்வர வேண்டும் என்று ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையிலான முன்னணி அமைக்கப்பட்டு புதிய அரசாங்கத்தை அமைக்கும் பணிகள் இந்த மாதத்தில் இருந்து விரைவுபடுத்தப்படும் என்று அவர் கூறினார். கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஜே.வி.பியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது,
மஹிந்த சிந்தனையும், மக்கள் ஆணையையும் மீறி அரசாங்கம் செயற்படுகிறது. அன்று ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த சிந்தனையின் அடிப்டையில் நாட்டை ஆட்சி செய்யவே ஆதரவு வழங்கினோம். ஆனால் இன்று அனைத்தும் தலைகீழாக மாறி விட்டது. தேசியப் பிரச்சினை தீர்வு, பொருளாதாரப் பிரச்சினை, விலைவாசி உயர்வு போன்ற எந்தவொரு பிரச்சினை தொடர்பிலும் அரசாங்கம் தெளிவான நிரந்தரமான கொள்கையை கடைபிடிக்கவில்லை.
மக்கள் கொடுத்த ஆணையை மீறி தேசிய பிரச்சினைக்கு சமஷ்டி முறை மூலமான தீர்வை காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக ஒற்றையாட்சி சமஷ்டி முறை கலந்த தீர்வொன்றை முன்வைக்கப் போவதாக அரசாங்கம் கூறியுள்ளது. இது மக்களை ஏமாற்றும் ஒற்றையாட்சியை கைவிட்டு சமஷ்டிக்கான முன்னேற்றமாகும். ஊழல் மோசடிகள் எண்ணிக்கையில் அடங்காமல் தலைவிரித்தாடுகிறது. வீண் விரயங்களும் அத்துமீறியுள்ளன. இதனைத் தடுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளையும் நாட்டின் தலைவர் மேற்கொள்வதில்லை. ஜனநாயகம் மீறப்படுகிறது. இதுவரையில் 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய சுயாதீன அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கப்படவில்லை. இவ்வாறு அனைத்து பிரச்சினைகளிலும் தன்னிச்சையாக அரசாங்கம் செயற்படுகின்றது.
கிழக்கு மாகாண சபை தேர்தலை அடிப்படையாக வைத்து இம்முறை மேதினக் கூட்டத்தை அரசாங்கம் தெஹியத்த கண்டியவில் நடத்துகிறது. அந்தளவுக்கு பதவி ஆசை வெறி பிடித்தாட்டுகின்றது. தற்போது தெஹியத்த கண்டியவிலுள்ள 21 பாடசாலைகள், ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளன. அங்கு வரும் அமைச்சர்கள் அரசாங்க முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வந்துள்ள படையினர் தங்குவதற்காகவே பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு பிற்படுத்தப்பட்ட பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் ஒரு வாரம் மூடப்பட்டால் அப்பகுதி மாணவர்களின் கல்வியின் நிலை என்னவாகுமென்பதையெல்லாம் அரசாங்கம் சிந்திப்பதில்லை.
நாட்டு மக்களுக்கு பொருளாதார நன்மைகளையோ, அரசியல் ஜனநாயக உரிமைகளையோ அரசாங்கம் வழங்குவதற்கு தயாராக இல்லை. எமக்கிருக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவையை அபிவிருத்தி செய்யாது தற்பெருமைக்காக பல கோடி ரூபா செலவில் "மிஹின் எயார்' விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. இதனால் 3200 மில்லியன் ரூபா வெறுமனே செலவு செய்யப்பட்டு நஷ்டமாகியுள்ளது. அரசாங்கம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி வீணான செலவுகளை செய்வதால் இன்று நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் ரூபா 150000 கடனாளியாக ஆக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் தேசியப் பிரச்சினை பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசியை கட்டுப்படுத்த எந்தவிதமான கொள்கைகளும், நீண்டகால திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லை. எந்தவிதமான திட்டமும் இல்லாமல் ஏனோதானோவென நாட்டை ஆட்சி புரியும் நிர்வாகத் திறனில்லாத அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் காலம் வந்து விட்டது.
எனவே, புதியதொரு அரசாங்கத்தை உருவாக்கும் போராட்டத்திற்கு மக்கள் அணி திரள வேண்டும். ஜே.வி.பி தலைமையிலான புதிய முன்னணி ஆட்சியை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இம் மாதத்திலிருந்து விரைவுபடுத்தப்படும். அனைத்து தேசப்பற்றுள்ள அமைப்புக்களுடனான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு புதிய அரசாங்கத்தை உருவாக்குவோமென்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஜே.வி.பி எம்.பிக்களான விஜித ஹேரத், அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.