தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இன்று நாடளாவிய ரீதியில் மேதின ஊர்வலங்களையும் கூட்டங்களையும் நடத்தவுள்ளன. பிரதான கட்சிகள் இம்முறை மேதின ஊர்வலங்களை நடத்தாத போதும் கூட்டங்களையும் பிரார்த்தனை நிகழ்வுகளையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளன. கொழும்பில் மட்டும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் 8 பொதுக்கூட்டங்களை நடத்தவுள்ளன.மலையக கட்சிகள் மலையகத்தில் மேதின ஊர்வலங்களையும் கூட்டங்களையும் நடத்த விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளன.
மேதின ஊர்வலங்கள், கூட்டங்களை முன்னிட்டு தலைநகர் கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க., ஜே.வி.பி. என்பன இம்முறை மேதின ஊர்வலங்களை நடத்தவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேதின பொதுக்கூட்டத்தினை மட்டும் தெய்யத்து கண்டியில் நடத்துகின்றது.
தெய்யத்து கண்டி நகரில் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சுதந்திரக்கட்சியின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் உட்பட பெருமளவானோர் பங்குபற்றவுள்ளனர். சுதந்திரக் கட்சியின் கூட்டத்தை முன்னிட்டு தெய்யத்து கண்டியில் வரலாறு காணாத பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நகர சபை மைதானத்தில் ஜே.வி.பி.யின் கூட்டம் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மே தின கூட்டம் தலைவர் சோமவங்ச அமரசிங்க தலைமையில் ஊர்வலமின்றி கொழும்பு மாநகர சபை மண்டப திடலில் பிற்பகல் 1 மணியளவில் நடைபெறும். இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தலைமையிலான அணியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.தே.க பூஜை வழிபாடு
பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி இம்முறை மே தின கூட்டத்தையோ,ஊர்வலத்தையோ நடத்தவில்லை. புதுக்கடையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸாவின் உருவச்சிலைக்கு காலையில் மலர்மாலை அணிவிப்பதுடன். நல்லாசிவேண்டி நாடளாவிய ரீதியிலுள்ள விஹாரைகள்,ஆலயங்கள்,பள்ளிவாசல்களில் விசேட சமய பிரார்தனைகளை நடத்தவிருக்கின்றது. பிரதான வழிபாடு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் களனி ரஜமஹாவிஹாரையில் மாலை 5 மணிக்கு நடைபெறும்.
அட்டனில் இ.தொ.கா.
இதேவேளை மலையக மக்களை பிரதிநித்துவப்படுத்துகின்ற கட்சிகள், தொழிற்சங்கங்கள், நுவரெலியா,பதுளை ,மாத்தளை, காலி ஆகிய மாவட்டங்களில் பிரதான நகரங்களில் மேதின கூட்டங்களை நடத்துகின்றது. மலையகத்தில் 8 மேற்பட்ட ஊர்வலங்களும் கூட்டங்களும் நடைபெறவுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் அட்டன் நகரில் இன்று முற்பகல் மேதின ஊர்வலத்தையும் கூட்டத்தையும் நடத்தவுள்ளது.
மலையக மக்கள் முன்னணி
மலையக மக்கள் முன்னணியின் மேதினம் இம்முறை பண்டாரவளை நகர மைதானத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், சமுதாய அபிவிருத்தி சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான பெ.சந்திரசேகரனின் தலைமையில் இன்று நடைபெறும்.
ஊஜா மாகாண சபை உறுப்பினரும், முன்னணியின் பதுளை மாவட்ட அமைப்பாளருமான ஏ.அரவிந்தகுமார், முன்னணியின் செயலாளர் நாயகம் எஸ். விஜயகுமாரன், உப தலைவர் ஏ.லோரன்ஸ், தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சுப்ரமணியம், தேசிய அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், தொழிற்சங்க வாதிகள் மற்றும் தமிழ்நாட்டு கலைஞர்கள், அமைச்சர்கள் கலந்துகொள்ளும் இம்மேதினத்திற்கு மலையகத்திலிருந்தும் கொழும்பிலிருந்தும் பெருமளவிலான மக்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மலையக மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் மற்றும் சிறுபான்மை தமிழ் மக்களின் இனப்போராட்டத்திற்கு நிரந்தரத் தீர்வு போன்ற முக்கியமான விடயங்கள் இம் மேதினத்தின் கருப்பொருளாக அமையவிருக்கின்றது என முன்னணியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ்
பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் மேதின ஊர்வலமும் கூட்டமும் அதன் செயலாளரும் பிரதி அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தலைமையில் பதுளை நகரில் நடைபெறவுள்ளது.
காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் மேதினம், பதுளை நகரில் ஊர்வலமும் சேனாநாயக்க மைதானத்தில் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்
ஜனநாயக தொழிலாளர் காங்கரஸின் மேதின ஊர்வலமும் கூட்டமும் கட்சியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.யின் தலைமையில் பொகவந்தலாவை நகரில் நடைபெறவுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கம்
தொழிலாளர் தேசிய சங்கம் ஏற்பாடு செய்துள்ள மேதினம் இன்று காலை 10 மணிக்கு அதன் தலைவர் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தலைமையில் தலவாக்கலை மத்திய பஸ்தரிப்பிட நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் மலையக மக்களின் எதிர்கால நன்மைகள் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கம் மேற்கொள்ளவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்படவுள்ளதோடு, இக்பால் ஜெகன் ரட்ணம் ரட்ணதுரை இணைந்து சித்தாராவின் இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளதோடு உலக கின்னஸ் சாதனை வீரர் நஸீர் பர்ஷானின் மயிர் சிலிர்க்க வைக்கும் விஷப் பாம்புகளுடனான நடனமும் இடம்பெறவுள்ளது.
தொழிலாளர் விடுதலை முன்னணி மத்திய மாகாண கல்வியமைச்சர் எஸ். அருள்சாமி தலைமையில் நானுஓயாவிலும், லங்கா தோட்ட தொழிலாளர் யூனியன் செயலாளர் இராதநாதன் தலைமையில் மாத்தளையிலும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்க மேதினம் செயலாளர் நாத்சமரசிங்க தலைமையில் காலியிலும் இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் நாவலப்பிட்டியில் மேதின கூட்டங்களை நடத்தவிருக்கின்றது.
தோட்டவாரியாக கூட்டங்கள்
இதேவேளை, விவசாய தோட்ட தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, அகில இலங்கை தேசிய தொழிலாளர் ஐக்கிய முன்னணி உள்ளிட்ட மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொழிற்சங்கங்கள் மேதின கூட்டங்களை தோட்ட ரீதியாக நடத்துகின்றது.
மலையகத்தைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மலையகத்தை மையமாகக் கொண்டு இம்முறை மேதின கூட்டங்களை நடத்துகின்ற போதிலும் பாதுகாப்பு மற்றும் மோசமான காலநிலையை கருத்தில் கொண்டு சில தொழிற்சங்கங்கள் மேதின ஊர்வங்கள் நடத்துவதை தவிர்த்து கொண்டன. இலங்கை சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ் கட்சி மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி இணைந்து நடத்தும் மேதின ஊர்வலம் நண்பகல் 1.00 மணிக்கு நாராஹேன்பிட்டி சாலிகா மண்டபத்திற்கருகில் ஆரம்பமாகி கிருலப்பனை நகர சபை மைதானத்தை வந்தடைந்து அங்கு கூட்டம் நடைபெறவுள்ளது. யுத்தத்துக்கு எதிராக கூட்டம்
தொழிற்சங்கங்களின் கூட்டிணைப்புடன் இன்றைய மேதினக் கூட்டத்தை யுத்தத்தை எதிர்த்து இடதுசாரி முன்னணி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடத்தவுள்ளது.
பாலா தம்பு தலைமையிலான இலங்கை வர்த்தகர்கள் ஊழியர்கள் சங்கம், ஐக்கிய தொழிற்சங்க சம்மேளனம், ஷா தலைமையிலான வங்கி ஊழியர் சங்கம் இணைந்தே மேதின ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் நடத்தவுள்ளது.
நண்பகல் 1.00 மணிக்கு கொள்ளுப்பிட்டியிலுள்ள இலங்கை வர்த்தக சங்க மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமாகும் ஊர்வலம் மாலை ஹைட் பார்க் வந்தடைந்து 3.00 மணிக்கு பொதுக் கூட்டம் நடைபெறும். இவ் ஊர்வலத்தில் இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்னவும் கலந்துகொள்ளவுள்ளார்.