மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் மடு தேவாலயத்தில் பிரதிஸ்டை செய்ய மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும் கத்தோலிக்க ஆயர்களுக்கும் அழுத்தங்கொடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது.
மடு பிரதேசத்தை விசேடமாக சமாதான வலயமாக பிரகடனப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சார்பில் ஒமல்பே சோபித தேரர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.விடுதலைப் புலிகளின் மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டிருந்த மடு தேவாலயத்தை எமது படைவீரர்கள் மீட்டெடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் மன்னார் ஆயர் இரயப்பு ஜோசப் புலிகளுக்கு சார்பாக செயலாற்றுவதாகவும் இதனால்தான் மடு தேவாலயப் பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தனது இரண்டாம் நிலை ஆயர் ஒருவரை அனுப்பியதாகவும் ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் இலங்கையில் யுத்தம் இடம்பெறவில்லை எனவும் ஈழவாதம் என்ற சித்தபிரமை பிடித்த பயங்கரவாதிகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே மன்னார் ஆயர் இரண்டு தரப்பினரும் மடு பிரதேசத்தை சமாதான வலயமாக பிரகடனப்படுத்துமாறு விடுக்கும் கோரிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யுத்தம் புரியும் இரண்டு தரப்பினர் என்ற ஆயரின் கூற்றின் மூலம் இரண்டு தனிநாடுகள் என்ற கருப்பொருளே தொக்கு நிற்பதாக சோபித தேரர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.இந்தக் கூற்று இலங்கை அரசியல் சாசனத்திற்கு முரணானதொன்றென அவர் ஆயரை சாடியுள்ளார்.
மடு பிரதேசம் மாத்திரமன்றி இந்த நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமானதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.எனவே மடு மாதாவின் திருச் சொரூபத்தை குறித்த ஆயர்கள் புலிகளின் நடமாட்டமற்ற மடு தேவாலயத்தில் மீண்டும் பிரதிஸ்டை செய்ய வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய சார்பில் ஒமல்பே சோபித தேரர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.