இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வே ஒரே தீர்வாக அமையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வின் மூலமே யுத்தத்திற்கு தீர்வு எட்டப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் தீர்வொன்றை முன்வைத்துள்ளதாகவும் அரசாங்கம் இதுவரையில் இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அரசாங்கம் கிழக்கில் தேர்தல் கொள்ளையில் ஈடுபட முனைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கின் எதிர்காலம் குறித்து கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக்கட்சியின் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மற்றும் கிண்ணியா பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். ஆயுததாரிகளின் அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு வாழ் மக்களை பாதுகாப்பதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை கிழக்குத் தேர்தல்களில் போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையான் ஆயுதங்களை களைந்து ஜனநாயக அரசியலில் ஈடுபடுவாராயின் அவருக்கு நாங்களும் ஆதரவளிக்கத் தயார் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் பிள்ளையான் குழுவுடன் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்களை களையுமாறு அரசாங்கத்தை கோரியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். பிள்ளையான் குழுவினர் ஆயுத செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை மேற்கொள்ளும் என ஐக்கிய தேசியக்க கட்சியின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.